Abstract:
தேசியவாதம் என்பது மொழி, பாரம்பரியம், பிரதேசம், பொருளாதாரம், கலாசாரம் போன்ற அம்சங்களுடன் கூடவே மதம், இனம், பொதுவான வரலாற்று அனுபவம் போன்ற காரணிகளும் கூட தேசங்களை உருவாக்கியதை வரலாறு காட்டியுள்ளது. எவ்வாறிருப்பினும் இத்தகைய புறநிலை அம்சங்களும் ஒன்றுசேர இருப்பினும் கூட ஒரு மக்கள் கூட்டம் தன்னளவில் தேசமாகிவிடமாட்டாது. எப்போது ஒரு சமூகம் இவற்றில் ஒன்றையேனும் அடிப்படையாகக் கொண்டு தனது அரசியலை முன்னெடுக்கத் தலைப்படுகின்றதோ அப்போதே அக்குறிப்பிட்ட சமூகமானது ஒரு தேசமாகப் பரிணமிக்கத் தொடங்கிவிடுகின்றது. இலங்கையில் காலணித்துவ ஆதிக்கத்தின் விளைவாக சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் தலைதூக்க தொடங்கியது. இது அரசியல், சமூக, கலாசாரரீதியாக மாற்றத்தினை தருவிக்கத் தொடங்கின. இத்தகைய தாக்கமானது இலங்கையின் கட்சி உருவாக்கத்திலும் தாக்கத்தை உண்டுபண்ணியது. இதன் விளைவாக பௌத்த தீவிர தேசியவாதம் இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தொழிற்படத் தொடங்கியமையால் ஏனைய சிறுபான்மை இனத்தவர்கள் அரசியல், ஜனநாயக உரிமை, மதம் போன்றவற்றில் புறக்கணிக்கப்படத் தொடங்கிய போது முரண்பாட்டு அரசியல் கலாசாரம் ஏற்படத் தொடங்கியது. பௌத்த தேசியவாதத்தினை கட்டியெழுப்பிய பெருமை அநாகரிக தர்மபாலவையையே சாரும். மதத்தினை மறுசீரமைக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட வளஉச்சியானது பிற்பட்ட காலத்தில் சிங்கள பௌத்த இனவாதமாக தனது பாதையை மாற்றி பயணிக்கத் தொடங்கியது. பௌத்த மதம் அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியாகவும், ஆட்சியினைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் மாறியமையினால் பௌத்த மதம் அரச மதமாக மாற்றியமைக்கப்பட்டது. இலங்கை பல்லின கலாசாரத்தினைக் கொண்ட ஜனநாயக நாடு. இரு பிரதான கட்சிகளாகிய ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மதவாதத்தினை முன்னிறுத்தியதால் ஏனைய சிறுபான்மை மத அடையாளங்கள் மீது விரோதப்போக்கினை கடைப்பிடித்ததோடு மதத்தினை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் தோன்றவும் வழிசமைத்தன. இந்தப்பின்னணியில் இவ் ஆய்வானது ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரு பிரதான கட்சிகளில் பௌத்த தேசியவாதத்தின் ஊடுருவலை ஆய்வு செய்வதாக அமைகின்றது. இவ்ஆய்வானது இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் இரு பிரதான கட்சிகளினதும், இலங்கையில் பௌத்த மதத்தினதும் வரலாற்றை ஆய்வு செய்யும் வகையில் வரலாற்று முறையினையும் கட்சிகளின் மதம்சார் கொள்கைகளை ஒப்பீடு செய்யும் வகையில் ஒப்பீட்டு அணுகுமுறையினையும் கட்சிகளின் மதச்சார்பான தன்மையினை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யும் வகையில் விமர்சன முறையினையும் அடிப்படையாகக் கொண்டு இவ்ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.