Abstract:
சர்வதேச அரசியலில், எண்ணெய் வளம் கொண்ட பிரதேசமான மேற்காசியா இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்பு அதிகம் முக்கியமான பிராந்தியமாக விளங்கியது. மேற்காசியா அரசியலிலே மன்னாராட்சி, பிரபுத்துவம் போன்ற பராம்பரியங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் சர்வாதிகார ஆட்சி பல நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருகின்றன. இவற்றிற்கு எதிராக பல போராட்டங்கள் அவ்வப்போது நிகழ்ந்த போதும் அதிகமாற்றம் அடையவில்லை. இந்நிலையிலேயே 2010களுக்கு பின் அங்கு எழுச்சி பெற்ற மக்கள் போராட்டம் (அரபு வசந்தம்) அப்பிராந்திய அரசியலை மாற்றத்திற்கு உள்ளாக்கியது. இவ் அரபு வசந்தம் உலக வல்லாதிக்க நாடுகளுக்கிடையிலான குறிப்பாக அமெரிக்க - ரஷ;சியாவின் அதிகாரப் போட்டிக்கு ஏற்ற வகையில் திசை திருப்பப்படுகின்றது. அரபு நாடுகள் பலவற்றில் தொடங்கப்பட்ட அரபு வசந்தம் என்ற யுத்தம் குறுகிய காலத்துக்குள் முடிவுக்கு வந்துள்ள போதிலும் சிரியாவின் யுத்தம் மாத்திரம் தான் பல வருடங்களைத் தாண்டியும் தொடர்கின்றது. இந்த யுத்தத்தில் பலம் பொருந்திய நாடுகள் இரண்டு அணிகளாக பிரிந்து நின்று செயற்படுகின்றன. இரண்டு அணிகளின் தலைமை பொறுப்பை அமெரிக்க - ரஷ;சியா ஆகிய இரு நாடுகளே வகிக்கின்றன. இவ்விரண்டு நாடுகளுக்கிடையே இடம்பெறும் சிரியா மீதான இராஜதந்திர போட்டி மேற்காசியா அரசியலை கொதிநிலைக்குள் உட்படுத்தியுள்ளது. அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகளும், சவூதியின் தலைமையில் வளைகுடா நாடுகளும் சிரிய ஜனாதிபதி ஆசாத்தின் பதவி கவிழ்ப்பிற்கு திட்டமிட்டன. ரஷ;சியாவின் தலைமையில் ஈரானும், சீனாவும் அசாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் ஆட்சி மாற்றத்தையும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆசாத்தின் வீழ்ச்சியும் ஆட்சி மாற்றமும் சிரியாவில் தமது நலன்களை சீர்குலைத்து விடுமென இந்த நாடுகள் அஞ்சுகின்றன. இவ்வாறு அமெரிக்க - ரஷ;சியா நாடுகளுக்கிடையிலான மோதல் வளர்கின்ற அதே நேரம் அது சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் அல் ஆசாத்துக்கும் இடையில் மோதலில் பிரதிபலிக்கின்றது. அமெரிக்க – ரஷ;சிய நாடுகளுக்கிடையே நிலவும் சர்வதேச அதிகாரப் போட்டியும் அப்போட்டியின் அடிப்படையில் சிரிய விவகாரம் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது தொடர்பானதாக இவ்ஆய்வு அமைந்துள்ளது. 'சிரியா விவகாரத்தினால் மேற்காசிய அரசியலில் ஏற்பட்டுள்ள கொதிநிலையானது அமெரிக்க - ரஷ;சியா அதிகாரப் போட்டியால் நிர்ணயிக்கப்படுகின்றது.' எனும் கருதுகோளை முன்வைத்து இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. பிரதான நோக்கமாக 'சிரியா மீதான அமெரிக்க - ரஷ;சிய அதிகாரப்போட்டியினை ஆராய்வதாகவுள்ளது. இவ்வாய்வு ஒரு விபரணரீதியான ஆய்வாக இருப்பதால் அதிகம் கலப்பு முறையியலினை கொண்டதாக இனங்காட்டப்படுகிறது. குறிப்பாக இவ்வாய்வுக்கு இரண்டாம் நிலைத் தரவுகளாக நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் தேசிய பத்திரிகையில் வெளிவரும் கட்டுரைகள், செய்திகள் மற்றும் இணையத்தள கட்டுரையிலிருந்து அதிக தரவுகளை மையப்படுத்தியதாக காணப்படுகின்றது.