Abstract:
ஏழாலையின் கிழக்குப்பகுதியிலே சித்தவைத்தியர் ஐயம்பிள்ளை அவர்களின் புத்திரனாக பிறந்தவர் பொன்னையா அவர்கள். இவர் ஏழாலை ஏழுகோவிலடியில் உள்ள சுன்னாகம் கல்விகற்று முருகேசு பண்டிதரிடமும். சைவப்பிரகாச வித்தியாசாலையில் குமாரசாமிப்புலவரிடமும் தமிழிலக்கியம், இலக்கணங்களை ஐயம்திரிபுறக் கற்று கல்விமானாக உருவாகினார். அதுமட்டுமன்றி தனது தந்தையாரிடம் சித்த வைத்தியத்தை கற்றுத்தேர்ந்தார். இவர் சித்த வைத்தியம், ஆன்மிகம் இரண்டையும் அடிப்படையாக வைத்தே செயற்பட்டு வந்தார். சமயம். பிரசங்கம். கட்டுரை ஆக்கம். கவி புனைதல். ஆலயத்தொண்டு. புராணபடலம், கூட்டுப்பிராத்தனை முதலிய செயற்பாடுகள் மூலம் ஆன்மிகச் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்தார். வைத்தியப்பணி, வைத்தியநூல்களைப்பதிப்பித்தலுக்கு அச்சுஇயந்திரம் தேவைப்பட்டது. 1930 இல் திருஞானசம்பந்தர் அச்சுயந்திரசாலையை அமைத்து கலாவல்லி எனும் சஞ்சிகையை சிறந்த ஆக்கங்களுடன் வெளியிட்டார். இக்காலத்தில் அருளானந்தசிவம் எனும் தீட்சாநாமம் பெற்றுக்கொண்டார். இவர் இலங்கையில் சித்தவைத்திய நூல்களைப் பதிக்கவேண்டுமென்ற ஆர்வத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும். வன்னிப்பிரதேசத்திலும் தேடி ஏடுகள், கையெழுத்துப்பிரதிகளை பெற்றுக் கொண்டு சித்தவைத்தியத்துறையில் மிகுந்த பற்றும், சமூகநோக்கும் கொண்டு இவற்றை சித்தவைத்திய நூல்களாக வெளியிடத்தொடங்கினார். யாழ்ப்பாணத்து வைத்திய நூல் வெளியீடு என்று ஆரம்பித்து பதின்மூன்று வைத்தியநூல்களை வெளியிட்டார். இவர் பதிப்பித்த நூல்களாவன 1927 இல் இருபாலைச்செட்டியாரால் இயற்றப்பட்ட வைத்தியவிளக்கம் எனும் அமிர்தசாகரம். பதார்த்தசூடாமணி. 1930 இல் வைத்தியத்தெளிவு (அனுபந்தத்துடன்) 500 செய்யுட்களைக் கொண்ட இந்நூலில் 202 செய்யுள்களே பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததால் அவற்றைப் பாதுகாக்கும் நோக்குடன் பதிப்பிக்கப்பட்டது. 1932 இல் வைத்தியசிந்தாமணி. 1933 இல் சொர்க்கநாதர் தன்வந்திரியம், 1936 இல் அங்காதிபாதம், 1938இல் வைத்தியபூரணம் - 205. பரராசசேகரம் எனும் நூலானது 1930ஆம் ஆண்டு முதல் 1936ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஏழு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் பாகம்- சிரரோகநிதானம், இரண்டாம் பாகம் - கெர்ப்பரோக நிதானம், மூன்றாம் பாகம்- சத்திரோகநிதானம். நான்காம் பாகம் - வாதபித்தசி லேற்பனரோக நிதானம், ஐந்தாம்பாகம் - மேகரோகம். பிளவைரோகம். பவுத்திரரோக நிதானம். மூலம், அதிசாரம், கிரகணி. கரப்பான். ஆறாம் பாகம் - உதரரோக நிதானம். ஏழாம் பாகம் கிரந்தி. குட்டரோக நிதானங்கள் ஆகும். இவர் 1948 இல் தை மாதம் 30ஆந் திகதி இறைபதம் எய்தினார். நூல்களை உருவாக்குவதில் பல நூலாசிரியர்கள் சிரமங்களை எதிர்கொண்டு ஒரு நூல் வெளியீட்டுடன் நிறுத்தியிருந்த வேளையில் ஐ.பொன்னையா அவர்கள் பல இடையூறுகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்து வைத்திய நூல் வெளியீடு என்று ஆரம்பித்து பதின்மூன்று வைத்திய நூல்களை வெளியிட்டார். இது சித்தமருத்துவ வரலாற்றில் ஒரு மைக்கல்லாகும். இவரின் முயற்சியை அடுத்து தற்போது பல நூல்கள் வெளிவரத்தொடங்கியிருப்பதும் அவருடைய எண்ணம் தற்போது நிறைவேறியிருக்கிறது.