Abstract:
தனக்கென தனித்தன்மை கொண்டு விளங்கிய வட இலங்கைப் பண்பாடானது புவியியல் அமைப்பின் சாதக தன்மை காரணமாக, காலத்துக் காலம் தென்னிந்தியச் செல்வாக்கிற்கு உட்பட்ட நிலையிலேயே வளர்ந்து வந்துள்ளது. வரலாற்றுக்கு முற்பட்டகாலம் தொட்டு இவ்விரு பிராந்தியங்களினதும் பண்பாடானது ஒரே பிராந்தியமென சொல்லுமளவிற்கு ஒத்ததன்மையினை கொண்டுள்ளதனை வரலாற்று, தொல்லியல் மூலங்கள் எடுத்துக் காட்டுகின்றன. வட இலங்கைக்கும், தென்னிந்தியாவிற்குமான இவ் தொன்மையான தொடர்ச்சியான பாரம்பரிய உறவானது யாழ்ப்பாண அரசு காலத்தில் அரசியல், பொருளாதார, பண்பாட்டு துறைகளில் மேலும் வலுப்பெற்றிருந்தது. சங்க காலத்திற்கு சமனான காலத்தில் இலங்கைத் தமிழரிடையே ஓர் அரசமரபு தோன்றியிருந்தது என்பதனை கி.மு 3ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டிற்கு வந்த பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் ஆய், வேள், பெருமகன்(மருமகன்), பருமக, மருமகள் போன்ற பட்டப்பெயர்கள் உறுதிப்படுத்துகின்றது (புஸ்பரட்ணம்:2001). அரச உருவாக்கத்திற்குரிய பலமான ஆதாரமான நாணயங்கள் நாணயங்கள் இலங்கைத் தமிழருடைய அரச உருவாக்கம் பற்றிய செய்திகளுக்கு மேலும் வலுவூட்டுவதாக உள்ளன. இலங்கையின் முதல் வரலாற்று இலக்கியங்களிலிருந்தே நாகதீப (நாகநாடு, உத்தரதேசம் என வட இலங்கையானது தனித்து அடையாளப்படுத்தப்பட்டு வந்திருப்பதனை காணமுடிகின்றது. இத்தனித்துவமே காலப்போக்கில் யாழ்ப்பாண அரசாக பரிணமித்திருந்தது.
இலங்கையின் அரச உருவாக்கத்தினை சங்ககாலத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் மரபு காணப்பட்டாலும் வட இலங்கையில் ஒரு மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட சுதந்திர தமிழரசு 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே நல்லூரைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்தமைக்கே உறுதியான, முழுமையான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இவ்வரசினையே தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. கி.பி 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் படைத்தளபதிகளான ஆரியச் சக்கரவர்த்திகள் தலைமையில் இடம்பெற்ற வட இலங்கைப் படையெடுப்பின் விளைவே யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமாகும். இவ்வரசே 1619இல் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் வரை வட இலங்கையிலும், கிழக்கிலங்கையில் சில பிரதேசங்களிலும் ஆட்சியிலிருந்தது.