Abstract:
மொழி சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்கின்றனர் மொழியியல் அறிஞர்கள். ஒரு சமுதாயத்தின் அத்தனை அம்சங்களையும் மொழி என்ற ஊடகத்தினூடே நாம் கற்றுக் கொள்கிறோம். இவ் ஆய்வுக்கட்டுரையும் யாழ்ப்பாணப் பிரதேச மொழி வழக்கில் மரியாதை வடிவங்களையும் (Polite forms)மரியாதை அற்ற வடிவங்களையும் (Non-Polite forms) கோடிட்டுக் காட்டுவதாக அமைகின்றது. இரண்டாம் மொழி வேற்று மொழியாக தமிழைக் கற்கின்ற ஒருவருக்கு யாழ்ப்பாணப்பிரதேச மொழி வழக்கில் மரியாதை வடிவங்களையும் மரியாதையற்ற வடிவங்களையும் பயன்படுத்தும் சூழலை அறியத் தருவதாகவும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் சிறப்பான பண்பாட்டு மொழிக்கூறுகளின் நுட்பமான அம்சங்களை வெளிக்கொணர்வதும் இவ் ஆய்வுக்கட்டுரையின் பிரதான நோக்கங்களாகும். ஆய்வுக்குரிய பிரதேசமாக யாழ்ப்பாணப் பிரதேசம் கொள்ளப்படுகின்றது. இவ் ஆய்வுத் தலைப்பானது விபரணமுறையியல் (Descriptive Methodology) ஆய்வாக விளங்குகின்றது. மரியாதை உள்ள, மரியாதை அற்ற வடிவங்களை சமூகச் செல்வாக்கின் அடிப்படையில் இக்கட்டுரை பார்க்கின்றது. மூவிடப் பெயர்கள் (Personal Pronouns) சமூக அந்தஸ்து (Social status) சொல்லாக்க ஒட்டுக்கள் (Derivational affixes) போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மரியாதை வடிவங்களையும் மரியாதை அற்ற வடிவங்களையும் வேறுபடுத்திப் பார்க்கமுடிகின்றது. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மரியாதை உள்ள வடிவங்கள், மரியாதை அற்ற வடிவங்களின் பயன்பாடு தொடர்பான மரபுரீதியான வரையறைகள் காணப்பட்டாலும் தொடர்பாடலின்போது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சில மாற்றங்களைப் பெற்றும் விளங்குகின்றன.