dc.description.abstract |
தற்காலத்தில் வழக்கிலுள்ள ஈழத்துச் சித்த மருத்துவ நூல்களுள் மிகவும் பழமையானது செகராசசேகர வைத்திய நூலாகும். அது கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த செகராசசேகர மன்னன் காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஏட்டுச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்நூலானது 1932 ஆம் ஆண்டு அச்சுவேலியைச் சேர்ந்த சா.தம்பிமுத்துப்பிள்ளை என்பவரால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. அந்நூலே எவ்விதமாறுதலுமின்றித் தற்போதும் பாவனையிலுள்ளது. ஆயினும் அந்நுாலை ஒரு செம்பதிப்பு என்று கூறமுடியாதுள்ளது. மூலநூல் 4000 பாடல்களைக் கொண்டதாகக் கூறப்பட்டாலும் பதிப்பு நூலில் 1667 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதாவது அரைவாசிக்கும் குறைவானபாடல்களே அச்சிற் பதிப்பிக்கப்பட்டுள்ளன. எனவே. பதிப்புநூலை ஒரு முழுமையான வைத்திய நூலாகக் கருத முடியாதுள்ளது. ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து, அச்சில் பதிப்பிக்கப்படாமல் விடுபட்டுப் போன பகுதிகளைக் கண்டறிந்து. பதிப்பு நூலைப் பூரணப்படுத்துவதன்மூலமும். மருத்துவப் பாடல்களுக்கு உரையும், விளக்கமும் எழுதிவெளியிடுவதன் மூலமும் மட்டுமே இந்நூலைச் சித்தமருத்துவத்துறைக்குப் பயனுள்ளதாகச் செய்யமுடியும். அந்தவகையில் செகராசசேகரவைத்தியம் சம்பந்தமான ஏட்டுச் சுவடிகளின் மீள்வாசிப்பானது பதிப்பு நூலைச் சீர்செய்வதில் அவசியமாகின்றது. இந்த ஆய்வின் நோக்கமும் அதுவேயாகும். ஏட்டுச்சுவடி ஆய்வின் முதற்கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பிரதான நூலகத்திலிருந்த 207 சுவடிகளில் தமிழ் வைத்தியத்திற்குரியனவாகக் காணப்பட்ட102 ஓலைச்சுவடிகள் ஆய்வுக்குட்படுத்தப் பட்டன. அவற்றுள் செகராசசேகர வைத்தியத்துக்குரியதாக முழுமையான ஏட்டுச்சுவடிகள் எதுவும் இருக்கவில்லை. ஆயினும், 29,102, 135, 169 என இலக்கமிடப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளில் செகராசசேகர வைத்தியத்தின் சில பகுதிகள் இடம்பெற்றிருந்தமை கண்டறியப்பட்டது. 29.169 இலக்க ஏட்டுச்சுவடிகள் செகராசசேகரம் - சர்ப்பசாஸ்திரம் என்றும். 135 ஆம் இலக்கச்சுவடி அமுதாகரம் - விடவைத்தியம் என்றும் பெயரிடப்பட்டிருந்தபோதிலும் 29. 169 இலக்கச்சுவடிகளில் சித்தராரூடம் - தெரிகவி. அமுதாகரம் ஆகிய நூல்களும் எழுதப்பட்டிருந்தன. 135 ஆம் இலக்க ஏட்டுச்சுவடியில் முதல் இரு செய்யுட்கள் செகராசசேகரம் சர்ப்ப சாஸ்திரத்துக்குரியனவாகவும் ஏனையவை அமுதாகரத்துக்குரியனவாகவும் காணப்பட்டன. சர்ப்பசாஸ்திரம் என்னும் பகுதி தம்பி முத்துப்பிள்ளையின் பதிப்பில் இடம்பெற்றில்லை. 102 ஆம் இலக்க ஓலைச்சுவடி பெயர் ஏதும் இடப்படாமனும் 88 பாடல்கள் கொண்டதாகவும் உள்ளது. அச்சுவடியில் குணபாடம்.நாடிவிதி. மரணக்குறிகள் என்னும் மூன்று பகுதிகள் எழுதப்பட்டுள்ளன. |
en_US |