dc.description.abstract |
கி.பி 15 ம் நூற்றாண்டிற்கு முன்னர் இந்தியா முழுவதும் சிறப்புற்றிருந்த சைவசித்தாந்த மரபு இன்று தமிழ்நாட்டிலும், யாழ்ப்பாணத்திலும், மலேசியாவிலும் இன்னும் தமிழர் வாழும் பிரதேசம் எங்கும் சிறப்புற்றிருக்கின்றது. தமிழ்நாட்டில் வளர்ந்த சைவ சித்தாந்த மரபுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண சைவ சித்தாந்த மரபு தனித்துவமானது என்பதைப் புலப்படுத்துவது ஞானப்பிரகாசர், ஆறுமுகநாவலர், காசிவாசி செந்திநாதையர் போன்றவர்களின் சார்பிலான பங்களிப்புக்கள். வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் இம்மரபின் மூலவராக ஞானப்பிரகாசர் கொள்ளப்படுகின்றார். இவர் மரபில் வந்த ஆறுமுகநாவலரின் முதன்மை மாணாக்கன் காசிவாசி செந்திநாதையர். இம்மகான் காசியில் பத்து வருடங்கள் வடமொழியை முற்றுறக்கற்று, அதன் பயனாக ஸ்ரீ நீலகண்டர் எழுதிய சிவாத்துவித சைவபாடியம் சைவசித்தாந்தத்திற்குப் பேரரணாக இருப்பது கருதி, அந்நூலினை வடமொழியில் இருந்து தமிழிற்கு மொழி பெயர்த்தளித்தார். இந்நூல் சைவசித்தாந்தத்திற்கு பெரிதும் அந்நியமில்லாத சிவாத்துவித சைவமரபைக் கூறுவதுடன், வேதாகமங்களை வேறுபாடு இன்றி சான்று காட்டுகின்றது. வேதாந்தம் எனப்படும் உபநிடதம் மட்டுமன்றி அதன்வழி எழுதப்பட்ட பிரமசூத்திரமும் முப்பொருள் உண்மையை விளக்குவதுடன், பிரமம் என்ற சப்தத்தினால் சிவபெருமான் அறியப்படுகின்றார் என்பதனையும், பிரமசூத்திரத்தில் வியாசரது கருத்து, சகுணப்பிரமமே முடிநிலையானது என்பதும் அந்தச் சகுணப்பிரமம் சக்தியோடு கூடிய சிவபெருமான் என்பதும் ஆகும். அவர் ஏகான்மவாதிகள் கூறுவது போல் நிர்க்குணத்தன்மை உடையவர் அல்லர் சகல வகையான சிறப்புக் குணங்களோடும் கூடிய சகுணத்தன்மை உடையவர் என்பதனையும் எடுத்துக்காட்டுகின்றது. மேலும், ஏகான் மவாதிகள் சிவாத்துவித சைவபாடியத்தில் செய்த இடைச் செருகல்களையும், திரிபுகளையும், நீலகண்டர் சிற்சில இடங்களில் பிரமசூத்திரத்திற்கு மாறுபட பொருள் செய்திருப்பதனையும் செந்திநாதையர் மொழிபெயர்ப்பின் ஊடாக எடுத்துக் காட்டியுள்ளார். பிரமசூத்திரத்திற்கு சங்கரர், இராமானுஜர் போன்றோர் எழுதிய உரைகளில் காலத்தால் முற்பட்டது நீலகண்டரின் உரையே. இதனைப் பின்பற்றியே ஏனையோர் உரைகள் எழுதினர். சங்கரரது பிரமசூத்திர உரை நூலாசிரியரது கருத்தைப் பிரதிபலிக்காது தனது சொந்தக்கருத்தை நூலாசிரியர் கருத்து என உலகை நம்பச் செய்தமையை இது சான்றுகளுடன் காட்டுகின்றது. பிரம சூத்திரத்தின் எண்ணிக்கை 545 ஆக இருக்க சங்கரர் சூத்திரங்கள் சிலவற்றைப் பிளந்தும், சிலவற்றை இயற்றியும் 555 ஆக ஆக்கினார் என்பது எடுத்துக்காட்டப்படுகின்றது. மேலும் பிரமசூத்திரம் சைவ சித்தாந்த மெய்யியலிற்குப் பிரமாண நூலாக அமைகின்ற அதேவேளை சிவாத்துவித சைவபாடியம் சைவசித்தாந்த மெய்யியல் விளக்கத்திற்கு ஆதாரமாக அமைகின்றமையும் விளக்கப்படுகின்றது. இதன்வழி சிவாத்துவித சைவத்திற்கு தமிழக சித்தாந்த அறிஞர்கள் வழங்கியுள்ள இடத்தினையும், சைவசித்தாந்த நோக்கில் சிவாத்துவித சைவபாடியப் பொருள் விளக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனையும், தமிழக சித்தாந்த மரபில் இருந்து வேறுபட்ட வகையில் யாழ்ப்பாண சித்தாந்த மரபின் தனித்துவத்தையும் ஆதாரப்படுத்துவதாகவும் இவ்வாய்வு அமைகின்றது. |
en_US |