Abstract:
இலக்கியத்தைச் சுவைப்பதற்கு காரணமாய் அமைந்த அம்சங்களுள் அணி;யலங்காரங்கள் என அழைக்கப்படும். காவியக் கோட்பாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவமுண்டு. சம்ஸ்கிருத மொழியில் எழுந்த இலக்கிய விமர்சனக்கருத்துக்கள் பல்வேறு இலக்கியக் கோட்பாடுகளாலான ரசம், த்வனி, குணம் இவற்றைப் பற்றி பேசினாலும் அணிகளுக்கும் அதிகளவு முக்கியத்துவம் தந்துள்ளன. ஆனந்தவர்த்தனர் உருவாக்கிய த்வனிக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட நூல்களான காவியப்பிரகாசம், சாகித்தியதர்ப்பணம், சிருங்காரப்பிரகாசம் போன்ற நூல்களில் ரசம் அல்லது த்வனிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும் இந்நூலில் பெரும் பகுதிகள் அணிகள் பற்றித்தான் பேசுகின்றன அணிகளைப் பற்றி மிக உயர்ந்த எண்ணம் இருந்ததால்தான் நாட்டிய சாஸ்திர ஆசிரியர் பரதர் குறிப்பிடும் நான்கு அணிகளிலிருந்து பிற்காலத்தில் நூற்றியிருபதுக்கும் மேற்பட்ட அணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பரதருக்கு முற்பட்ட காலத்திலேயே அலங்காரங்களின் செல்வாக்கை வட மொழி இலக்கியங்களில் காணக்கூடியதாய் இருந்தாலும் அணிக்கோட்பாட்டின் பரிணாம வளர்ச்சியை நாட்டியசாஸ்திரத்தில்தான் காணக்கூடியதாயுள்ளது. நாட்டியத்தைப் பற்றிய நூலாயினும் பல இலக்கிய கோட்பாடுகளும் நாட்டிய சாஸ்திரத்தில் காணப்படுகின்றன. வடமொழியில் நமக்கு கிடைக்கின்ற காலத்தால் முற்பட்ட இலக்கிய விமர்சன நூல் பரதநாட்டியசாஸ்திரமே. பரதரால் கூறப்படும் அணிகள் யாவை? அவை பிற்கால அணியியலாளருக்கு எவ்வகையில் வழிகாட்டியாய் அமைந்தன என்பது பற்றி ஆராய்வது அவசியமாகும். பரதரால் கூறப்படும், உவமை போன்ற பொருளணிகளும் யமகம் போன்ற சொல்லணிகளும் இவ்வாய்விலே எடுத்து அவதானிக்கப்படுகின்றன. பரதரால் குறிப்பிடப்படும் லக்ஷணங்கள் என்ற தொகுதிக்குள் அடங்குவனவற்றுள் சில, பிற்கால காவியவியலாளர்களால் அணிகளாகவும் குணங்களாகவும் கூறப்படுகின்றன. யமகம் போன்ற அணிகள் ரசங்கள் பொருந்தியவையாய் காணப்படுகின்றன. பிற்கால அலங்காரக்கோட்பாட்டின் வளர்ச்சிக்கு நாட்டியசாஸ்திரத்தில் காணப்படும் அலங் காரங்களின் வகிபங்கு எத்தகையது என்பது இவ்வாய்வில் எடுத்து ஆராயப்படுகின்றது. நாட்டிய சாஸ்திரத்தின் பதினாறாம் அத்தியாயத்தில் வாசிக அபிநயத்தில் குறிப்பிடப்படும் அலங்காரங்கள் பற்றிய பகுதி முழுமையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஆய்வுக்குரிய பிரதான மூலங்களாக பரதநாட்டிய சாஸ்திரம், தண்டியின் காவியதர்சம், பாமஹரது காவிய அலங்காரம் போன்ற நூல்கள் அமைகின்றன. துணை மூலங்களாக அணிக்கோட்பாட்டுடன் தொடர்புடைய தமிழ், ஆங்கில ஆய்வுக்கட்டுரைகள் அமைகின்றன. பரதநாட்டிய சாஸ்திரத்தில் காணப்படும் அணிகள் விளக்கமாக எடுத்துக் கூறப்படுவதால் விபரணவியல் ஆய்வுமுறையாக கட்டுரை அமைந்துள்ளது. பரதர் சொல்லணி, பொருளணி என்ற பேதம் காட்டாவிட்டாலும் இருவகைப்பட்ட அணிகளையும் எடுத்துக் கூறுகின்றார். உவமையின் ஐந்து வகைகள் யமகத்தின் பத்து வகைகள், எடுத்துக் கூறப்படுகின்றன. அலங்காரங்கள் ரசங்களுக்கு எவ்வாறு பிரயோகமாகின்றன என்பது பற்றியும் எடுத்துக் கூறப்படுகின்றது.