Abstract:
குறுந்தொகைப் பாடல்களில் பெண்மொழி என்னும் பொருளில் இந்த ஆய்வு அமைகின்றது. பெண்ணிய ஆய்வில் பெரிதும் பேசப்படும் விடயங்களில் ஒன்றாகப் பெண்மொழி அமைகின்றது. பெண்மொழி என்பது ஆணாதிக்கச் சிந்தனைகளுக்கு எதிரான குரல் என்ற கருத்தைப் பெண்ணியவாதிகள் முன்வைக்கின்றனர். இன்று கவிதை எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவிஞர்களுக்கு முன்னோடிகளாகச் சங்கப் பெண்பாற் புலவர்கள் விளங்குகின்றனர். எட்டுத்தொகை நூல்களில் பரவலாகக் காணப்படும் பாடல்களைப் படிப்பதன் மூலம் தமிழ்மரபில் பெண்புலவர்களின் ஆளுமையை அறிந்து கொள்ளமுடியும். எட்டுத் தொகைப்பாடல்களில், கருத்துக்கள், வெளிப்படுத்தும் முறை, மொழிப்பயன்பாடு, உத்திகள் போன்ற நிலைகளில் ஆண் - பெண் பால்நிலை வேறுபாடு காணப்படுகின்றது. பெண்பாற்புலவர்கள் தமக்கென்ற சிறப்பான மொழிக்கையாளுகை மூலம் தமது கருத்துக் களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வானது குறுந்தொகைப் பாடல்களை ஆய்வு மூலங்களாகக் கொண்டமைகின்றது. பெண்கள் தங்கள் உள்ளத்து உணர்வுகளைக் கூறக்கூடாது என்ற மரபையும் தாண்டி தமது உணர்வுகளை வெளியிட்டமையை அவர்களின் கவிதை மொழியின் மூலம் இனங்காண்பதே இந்த ஆய்வின் நோக்கம். சங்கப்பாடல்கள் பல்வேறு பெயர் அறியாப் புலவர்களால் பாடப்பட்டுள்ளன. பாடல்களில் வரும் உவமையால் புலவர்களுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. பாடற் பொருளை நுண்மையாக ஆய்வு செய்வதன் மூலம் இச்சிக்கல் தீர்வு காணப்பெறும். ஆய்விலே பகுப்பாய்வு முறை, விவரணமுறை, ஒப்பீட்டு முறை ஆகிய ஆய்வுநெறிகள் மேற்கொள்ளப்படும். அகப்பாடல்களில் இடம்பெறும் மொழிவகைப்பாடு, மாந்தர்களின் கூற்றுக்கள் வகைப்படுத்தப்பட்டு பகுத்து ஆராயப்படும். அகப்பாடல்களைத்தக்க விளக்கம் செய்யும் வகையில் விவரணமுறை அணுகப்படும். பெண்பாற் புலவர் பாடல்கள் ஆண்பாற் புலவர்களின் பாடல் மொழி யோடு ஒப்பிட்டு ஆராயப்படும். இன்று பால் அடையாளத்துடன் அறியப்படும் பெண்கவிதை மொழியின் தனித்துவத்தினையும் மூலத்தினையும் சங்கப் பெண்பாற்புலவர்களின் பாடல்களிலிருந்து கண்டறிய வாய்ப்புண்டு.