Abstract:
உலகில் தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணச் சமூக ஊடகம் வழிகோலியது. சமூக ஊடகங்கள் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்று அவை இன்றியமையாதவையாக மாறி வருகின்றன. முதலாளித்துவ ஆணாதிக்க உலகில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் புதிய ஊடகங்கள் மூலம் நவீன வடிவம் பெறுகின்றன. குறிப்பாகச் சமூக ஊடகங்கள் மூலமாக அதிக அளவில் இணைய ரீதியான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றன. நேர்மையாக கருத்துக்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் பாலியல் ரீதியான தாக்குதல்களை இணைய வெளியிலும் மேற்கொள்கின்றனர். இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளிலும் இணையவெளி வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய இணைய உலகில் சமூக ஊடகங்கள் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தன. அதனால் சமூக ஊடகங்களில் கிடைத்த உச்ச பட்ச சுதந்திரம் பெண்கள் மீது இணைய வழி வன்முறைகள் நிகழ்வதற்கும் காரணமாகியது. இதற்காக எழுந்த மாதிரியாக இருபது(20) தொடக்கம் நாற்பத்தைந்து(45) வயதிற்குட்பட்ட ஐம்பது (50) பெண்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வின் மாதிரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, இரண்டாம் நிலைத் தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெறுதிசார் தகவல் ஆய்வு மற்றும் எண்சார் தகவல் ஆய்வு ஆகிய இரு ஆய்வு முறைமைகளும் இவ் ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுவெளியில் இயங்கும் பெண்களை முடக்குவதாகவும் பெண் என்ற காரணத்தினால் நிகழ்த்தப்படுபவையாகவும் இவ்வாறான வன்முறைகள் அமைந்திருக்கின்றன.