Abstract:
கதைகள் மக்கள் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. ஒரு நபர் தனது
வாழ்க்கை அனுபவங்களின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து தனது
கதைசொல்லல் வழியாக பெரியதொரு சமூக பிம்பத்தை உருவாக்கின்றார்.
பண்புசார் பகுப்பாய்வில், கதைகள் பல்வேறு சமூக நிகழ்வுகள் மற்றும் கோலங்களை வெளிப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. மக்கள் தாங்கள்
யாரைச் சந்தித்தார்கள் என்பதையும், சில நேரம் தங்கள் வாழ்நாளில்
மகிழ்ச்சியாகவோ அல்லது கவலையாகவோ இருந்த தருணங்களைத் தங்கள்
கதைகளின் மூலம் விவரிக்கின்றனர். இவ்வாய்வு, கொவிட்-19 பெருந்தொற்றால்
பாதிக்கப்பட்ட தாயொருவரின் சமூக அனுபவத்தை பகுப்பாய்வு செய்கின்றது.
இந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரிய தொற்றுநோயாக் கருதப்படும்
கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டதன் மூலம் தகவலாளி பெற்றுக்கொண்ட அனுபவத்தினை தன்னுடைய கதையின் வழியாக
விவரிக்கினறார். கொவிட்-19 பெருந்தொற்றுடன் இணைந்த வகையிலான பொதுச்
சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் செயன்முறைகள்
தனியனுடைய நலிவுக்கான காரணமாகவும் சமூகப் புறமொதுக்கல், பொருளாதார
நெருக்கடி, தனியனுக்குள்ளேயான மற்றும ; தனியன்களுக்கிடையிலான
முரண்பாடுகள் போன்ற எண்ணற்ற சமூக விளைவுகளின் மையமாகவும்
கருதப்படுகின்றன. கொவிட்-19 தொற்றுக்குள்ளான தாயொருவரின ; கதையின்
வழியாக அவர் சந்தித்த சமூக, பொருளாதார மற்றும் உளவியல்
பிரச்சினைகளை இவ்வாய்வு வெளிப்படுத்துகின்றது. தனியனுடைய வாழ்வில் பல்வேறுபட்ட உளசமூக மற்றும் சமூகப் பொருளாதார விளைவுகளை
ஏற்படுத்தும் தனிமைப்படுத்தல், குறிப்பாக கொவிட்-19 மூலம், பொதுமக்கள்
மத்தியில் சமூக களங்கம் மற்றும் சமூக பொருளாதாரப் பீதியை
ஏற்படுத்தியுள்ளது. இதனால், தனியன்கள் பல்வேறுபட்ட சவால்களைச் சந்திக்க
நேரிடுகின்றது. கொவிட்-19 காரணமாக ஏற்படும் சமூக களங்கம் மற்றும் சமூக பொருளாதார பீதி ஆகியன தனியனுடைய நாளாந்த வாழ்வில் எவ்வகையான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன என்பதனை இந்த கதையாடல் பகுப்பாய்வு
ஆராய்கின்றது. கொவிட்-19 வழியான பாதிப்புக்கள் பன்முகத்தன்மை வாய்ந்தன
என்பதனை இவ்வாய்வு வலிறுத்துகின்றது. இது சர்வதேச சமூகம், அந்தந்த
நாட்டின் அரசுகள் மற்றும் அதனுடைய மக்கள் ஆகியோரின் ஒன்றிணைந்த
பொறுப்புணர்வுகளை நாடுகின்றது. இந்த பெருந்தொற்றுக்கு எதிரான செயன்முறையில் அனைத்து தரப்பினரையும் ஒரு வட்டத்திற்குள்
அணிதிரட்டுவதன் மூலம் கொவிட்-19 இல்லாத உலகம் என்பது நிதர்சனமாகும்.