Abstract:
இலங்கையில் அரசியல் அதிகாரத்தினை பிரயோகிக்க கூடிய அரசியல் கட்டமைப்புக்களில் உள்ளூராட்சி கீழ் நிலைக் கட்டமைப்பாக வரலாற்று ரீதியாக நீண்டகாலம் தொழிற்பட்டு வருவதனைக் காணலாம். இவ் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதியைத் தெரிவு செய்கின்ற தேர்தல் முறைமைகளும் காலத்துக்கு காலம் திருத்தங்களுக்கு உட்பட்டு வந்ததுடன் சில சந்தர்ப்பங்களில் புதிய தேர்தல் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. அந்த வகையில் 2018ம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கென வட்டார ரீதியிலான பிரதிநிதித்துவம் மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்கின்ற தேர்தல் முறைமைகளினைக் கலந்து 60:40 என்கின்ற வகையில் கலப்புத் தேர்தல் முறையின் மூலம் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு உள்ளூராட்சி மன்றங்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன. இத்தகைய பின்னணியில் ஏற்கனவே இருந்த விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் குறைபாடுகள், வட்டாரங்களுக்கு பொறுப்புக் கூறக்கூடிய பிரதிநிதியினைத் தெரிவு செய்தல், பெண் பிரதிநிதிகளது எண்ணிக்கையினை அதிகரித்தல், பிரதேச அபிவிருத்தியின் தொடர்ச்சித் தன்மை போன்ற இலக்குகளினைக் கொண்டு உருவாக்கப்பட்ட வட்டார மற்றும் விகிதாசார முறையிலான கலப்புத் தேர்தல் முறை தனது இலக்குகளினை முழுமையாக அடைந்ததா? தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னருமான குறை நிறைகள் எவை என்பதனை அடையாளம் கண்டு குறைகளினை நீக்குவதற்கும் நிறைகளினைப் பலப்படுத்துவதற்கும் அல்லது அதிகரிப்பதற்குமான உபாயங்களினையும் வழிமுறைகளினையும் இனங்கண்டு பரிந்துரைப்பதனுடன் எதிர்காலத்தில் உள்ளூராட்சிக்கான பிரதிநிதிகள் ஜனநாயக ரீதியில் பிரதேச அபிவிருத்தியினை கருத்திற் கொண்டு எத்தகைய தேர்தல் முறையினூடாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதனையும் இவ் ஆய்வுக்கட்டுரை பரிந்துரைக்கின்றது. இதற்காக சமூக விஞ்ஞான ஆய்வு முறையான ஒப்பீட்டு விமர்சனப் பகுப்பாய்வு முறையினை பின்பற்றி இவ் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.