Abstract:
சோழர்காலத் தமிழக வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு முக்கியமான இலக்கிய ஆதாரங்களில் ஒன்றாகப் பெரியபுராணம் விளங்குகிறது. இவ்விலக்கிய ஆதாரமானது வெறுமனே சமய இலக்கியமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலைமாறி இந்திய வரலாற்றினை அதுவும் குறிப்பாகத் தமிழக வரலாற்றில் சோழர் காலத்தினை அறிந்து கொள்வதற்கான ஒரு வரலாற்று இலக்கியமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகச் சோழர் கால வரலாற்றினை அறிந்து கொள்ள விரும்புகின்ற எவரும் பெரியபுராணத்தினை ஒதுக்கிவிட்டு அதனது வரலாற்றினை நகர்த்த முடியாதென்பதே உண்மை. ஆந்த வகையில் இது தருகின்ற வரலாற்றுச் செய்திகளில் அரசியல் சார்பான செய்திகளே பிரதான இடத்தினை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தகைய செய்திகளில் ஆட்சிமுறைகள், ஆட்சியாளர்கள், அவர்களது நடவடிக்கைகள், மற்றும் கடமைகள், தானங்கள், போர' நடவடிக்கைகள் என'பன குறிப்பிடத்தக்கன. மேலும் பெரியபுராணம் தருகின்ற தரவுகளை இந்திய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு கிடைக்கின்ற பிரதான தொல்லியல் மற்றும் சாசனவியல் சான்றுகளின் உதவியுடன் உறுதிப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. இவ்வாயிவிற்கு முன்னோடியான ஆய்வுகள் எனச் சொல்லக்கூடியதாக ஒரு சில ஆய்வுகள் இவ்விடயமாக இருந்தாலும் அவை விரிவான ஆய்வுகளாக அமையாமல் காணப்படுகின்றமையானது ஆய்வில் ஆய்வாளர் எதிர்நோக்கிய முக்கியமான பிரச்சனையாகக் காணப்படுகின்றது. எனவே பெரியபுராணத்திலிருந்து சோழர் காலத்தினது அரசியல் சார்ந்த வரலாற்றினைப் பிரித்துப் பார்த்து தனித்து வரலாற்று நோக்கில் ஆராய்ந்தவர்கள் குறைவாக இருப்பதனாலும், வருங்கால ஆராய்ச்சியாளர்களுக்கு இவ்வாய்வினை ஆவணப்படுத்தி அவர்களது ஆய்விற்கு வழிசமைப்பதும் ஆய்வினது பிரதான நோக்கங்களாக அமைகின்றன. வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இவ்வாய்வில் பெரியபுராணமே பிரதான முதற்தர ஆதாரமாகவும் பின்னாளில் பெரியபுராணத்தினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், இணையத்தரவுகள் போன்றன இரண்டாம்தர ஆதாரங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் தமிழக வரலாற்றில் அதுவும் குறிப்பாகச் சோழர் காலத்தின் அரசியல் வரலாற்றினை அறிந்து கொள்வதில் பிரதான ஆதாரங்களில் ஒன்றாகப் பெரியபுராணமானது விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.