dc.description.abstract |
சிம்பாபேயினது வரலாற்றில்விடுதலை வீரராகவும் அதேநேரத்தில் தனது பதவியின் இறுதிக்காலப்பகுதியில் அந்நாட்டு மக்களால் வெறுக்கப்பட்டதொரு சர்வாதிகாரியாகவும் பேசப்படுகின்ற ஒருவரென்றால் அவர் அந்நாட்டின் முன்னாள் அதிபரான றொபேட் முகாபே என்பதில் இருவேறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை. வெள்ளையரினது இன ஆதிக்க காலணித்துவ ஆட்சியிலிருந்து சிம்பாவேயினது விடுதலையின் பொருட்டு ஆயுதமேந்தி போராடி அத்தேசத்திற்கு விடுதலையினைப் பெற்றுக் கொடுத்த ஒரு தலைவராக போற்றப்பட்டவர். சிம்பாவேயின் வளங்களை கொள்ளையடிக்கின்ற நோக்கத்துடன் நுழைந்த ஆங்கிலேயர்களை மாக்ஸிய கருத்துக்களினால் ஈர்க்கப்பட்ட சாதாரண ஆசிரியராக இருந்த முகாபே எதிர்த்து போராடினார். 1980 வரை வெள்ளையருக்கு எதிராகத் தனியானதொரு அமைப்பினை உருவாக்கி அதன் வழியாக நாட்டின் விடுதலையினைப் பெற்ற இவர் அந்நாட்டின் தலைவராக 2017 வரை ஏறத்தாழ 37 வருடங்கள் தொடர்ச்சியாக தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் தன்னை ஒரு ஜனநாயகவாதியாக உலகிற்கு இனங்காட்டிய முகாபே சிம்பாவே மக்களது தன்னிகரில்லாத் தலைவராக வலம் வந்தார். இருப்பினும் 1990களின் இறுதியிலிருந்து தனது ஆட்சியினைத் தக்கவைத்துக் கொள்ளுகின்ற நோக்கத்துடன் மக்களுக்கு பல்வேறு நெருக்குதல்களை கொடுக்க ஆரம்பித்தார். வெள்ளயரினை விரட்டியடிக்கின்ற நோக்குடன் முகாபே மேற்கொண்ட பின்னணியில் மேற்குலக முதலாளித்துவம் சிம்பாவே நாட்டிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன. இதனால் அந்நாட்டில் வறுமை, வேலையின்மை, வழலை வீழ்ச்சி என்பன ஏற்பட்டு நாடு மோசமான பொருளாதார நிலையினை அடைய வேண்டியதாயிற்று. இறுதியில் முகாபேயினது மனைவியின் செல்வாக்கானது அரசியலில் படிப்படியாக நுழைய ஆரம்பித்தமையின் காரணமாக வீழ்ந்து கொண்டிருந்த அவரது செல்வாக்கினை மேலும் கேள்விக்குள்ளாக்கியது. பின்னாளில் இராணுவத்துடன் மக்களும் கூடவே இவரது நிர்வாகத்தினை வெறுக்க ஆரம்பித்தமையின் முடிவுதான் முகாபேயினுடைய ஆட்சிக்கவிழ்ப்பாகும். அவ்வகையில் அவரது பதவிக்காலத்தில் விடுதலை வீரராகவும் சர்வாதிகாரியாகவும் இருகோணங்களில் விமர்சிக்கப்பட்ட ஒருவராகவே முகாபே திகழ்ந்திருந்தார். அவ்வகையில் அவரது மேற்குறித்த இவ்விரு நிலைப்பாடுகளே ஆய்வினது பிரதான பிரச்சினையாக உள்ளது. வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் அமையப்பெற்றுள்ள இவ்வாய்வில் அந்நிய நாடொன்று பெருளவிற்கு சமகால சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதனால் முதற்தர தரவுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இவ்வாய்விற்குத் தேவையான தரவுகள் பெருமளவிற்கு இரண்டாம்தரத் தரவுகளாகவும் அவதானிப்புக்கள், நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகள், இணையத்தின் மூலமாக பெறப்பட்ட தரவுகளாகவும் உள்ளன. ஆய்வினது நோக்கங்கள் பலவாக இருப்பினும் முகாபேயினது எழுச்சிக்கும் வீழ்ச்சிக்குமுரிய பின்னணியினை எடுத்துக்காட்டுவதே பிரதான நோக்கங்ளில் ஒன்றாக அமைந்துள்ளது. |
en_US |