Abstract:
நீண்டகால ஐரோப்பிய ஐக்கியத்துக்கு முடிவுகட்டிய நிகழ்வுகளிலொன்றாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதன் பிரதான உறுப்பு நாடான இங்கிலாந்தினுடைய திடீர் விலகலை நாம் கருதலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாக் கண்டத்தில் ஏற்பட்டிருந்த ஐக்கியத்தின் ஸ்திரத்தன்மை இதனால் சிதறுண்டு போனது (தினக்குரல்,25,ஜீன், 2016). இத்தகையதொரு முடிவினைத் தீர்மானித்தது அந்நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பே என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தினுடைய இம்முடிவானது அந்நாட்டிற்கும், அது சார்ந்திருந்த ஒன்றியத்துக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்வாக மட்டும் அமையாமல் சர்வதேசத்திற்கே பாதிப்பினை உண்டாக்கக்கூடிய ஒரு நிகழ்வாக இது காணப்படுகின்றது. அதுமட்டுமன்றிக் கருத்துக்கணிப்பின் மூலமாக எடுக்கப்பட்ட இத்தகைய முடிவினைச் செயற்படுத்த குறைந்தது இரண்டு வருடங்களாவது செல்லும். அந்தளவிற்கு இதில் சிக்கல்கள் பல காணப்படுகின்றன. மேலும் இதனால் எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற பாதிப்புக்களை இரண்டு பகுதியினரும் சமாளிப்பதும் சவாலானதே. இங்கிலாந்தினைப் பொறுத்தவரை அது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனேயே அதிகளவிற்கு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வந்தது. கருத்துக்கணிப்புக்கள் வெளியான சிலமணி நேரங்களிலேயே இங்கிலாந்தினதும், பிறநாடுகளினதும் பங்குச் சந்தைகள் சரிய ஆரம்பித்தன. இந்நிலையில் இங்கிலாந்துப் பிரதமரும் தான் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். கருத்துக் கணிப்பினது முடிவுகள் இங்கிலாந்துப் பிரதமருடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை என்பதே உண்மை. அது இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் பாதிப்பினை உண்டாக்கும், குடியேற்றவாசிகளைப் பாதிக்கும், தொழில் இழப்புக்கள் ஏற்படாலம். பிற ஐரோப்பிய ஒன்றியநாடுகளும் எதிர்காலத்தில் இங்கிலாந்தினைப் பின்பற்றலாம், ஐக்கிய இராச்சியத்திலிருந்து தன்னை விடுவிப்பதற்கும் ஸ்கொட்லாந்து முயற்சிக்கலாம், நாணயப் பெறுமதியில் சரிவு, உணவுத்தட்டுப்பாடு, உலகப் பொருளாதாரத்தின் உறுதியான தன்மைக்குப் பாதிப்புக்கள், ஆங்கிலமொழி சர்வதேச மதிப்பினை இழக்கலாம். இவையெல்லாம் இங்கிலாந்திற்கும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கும் உள்ள பொதுவான பிரச்சனைகளாகக் காணப்பட்டாலும் கூட தென்னாசிய நாடுகளில் ஒன்றான இலங்கையும் பல சவால்களை இதனால் எதிர்நோக்க வேண்டி வரலாம். இலங்கையினைப் பொறுத்த வரை அது தனது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியில் ஏறத்தாழ குறிப்பிட்ட சதவீதமான ஏற்றுமதியினை இங்கிலாந்திற்கே அனுப்புகின்றது. இதனால் இலங்கை வரிச்சலுகையினைப் பெறுவதில் வருங்காலங்களில் சிக்கல்கள் பலவற்றினை எதிர்கொள்ளும். வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதிலும் நடைமுறையில் பிரச்சனைகள் பல ஏற்படலாம். இங்கிலாந்திலுள்ள இலங்கையர்கள் மற்றும் பிற குடியேற்றவாசிகளுக்கும் இது சவாலாக அமையலாம். கல்வி தொடர்பான சந்தர்ப்பங்கள், வேலை வாய்ப்புக்கள் பாதிக்கப்படலாம். இதனால் தான் இலங்கை ஆரம்பத்திலிருந்தே இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை விரும்பியிருக்கவில்லை. இருப்பினும் இலங்கையானது தனியொரு பொருளாதாரக் கொள்கையினை வகுத்தள்ளதெனவும் இது இலங்கை நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தாது எனவும், அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்துடன் நேரடியாக ஒப்பந்தங்கள் சிலவற்றினை இலங்கையானது எதிர்காலத்தில் செய்யவும் உள்ள அதேநேரத்தில் வேறு வேறு நாடுகளுடன் கூடத் தனித்தனியான ஒப்பந்தங்களையும் வருங்காலத்தில் மேற்கொள்ளவுள்ளது.