Abstract:
சம காலத்தில் சமூகத்தில் நிகழும் பாரிய ஓர் பிரச்சினையாக காணொளி விளையாட்டை விளையாடும் சிறுவர்கள் உடலியல் சார் வன்நடத்தை, கோபம் சார்ந்த வன்நடத்தை, விரோத ரீதியிலான வன்நடத்தை, வாய்மொழி ரீதியலான வன்நடத்தை போன்றவற்றை சமூகத்தில் பிரயோகிப்பது இனங்காணப்பட்ட பிரச்சினை ஆகும். இதற்கமைய சிறுவர்களின் வன்நடத்தையில் காணொளி விளையாட்டின் தாக்கத்தை கண்டறியும் முகமாக “சிறுவர்களின் வன்நடத்தையில் காணொளி விளையாட்டின் தாக்கம்” எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது யாழ்ப்பாணத்தில் உள்ள கொக்குவில் பிரதேசத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொக்குவில் பிரதேசம் எட்டு கிராம சேவைப் பிரிவைக் கொண்டு காணப்படுகின்றமையால் இப் பிரதேசத்தில் காணொளி விளையாட்டை விளையாடும் 100 சிறுவர்கள் ஆய்வுசெய்யப்பட்டுள்ளனர். இவ் ஆய்விற்கு சிறுவர்களில் காணொளி விளையாட்டின் தாக்கத்தையும், அவர்களிடம் காணொளி விளையாட்டால் ஏற்பட்டுள்ள வன்நடத்தையையும் கண்டறியும் முகமாக சுயமாகத் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்தும், 1992ம் ஆண்டு புஸ் மற்றும் பெரி ஆகியோரால் உருவாக்கப்பட்ட வன்நடத்தை வினாக்காத்தும் (Aggression Questionnaire) ஆய்வுக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலை, இரண்டாம் நிலை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு, SPSS (Statistical Package for the Social Sciences) எனும் சமூக விஞ்ஞானத்திற்கான புள்ளிவிபரவியல் தொகுப்பு மென்பொருள் மூலம் தரவுப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர்களின் வன்நடத்தையில் காணொளி விளையாட்டுக்களின் தாக்கத்தை கண்டறிதல் இவ் ஆய்வின் நோக்கம் ஆகும். ஆய்வில் முன்வைக்கப்பட்ட கருதுகோளுக்கான சிறுவர்கள் அதிகம் வன்முறையான காணொளி விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள், பெண் பிள்ளைகளை விட ஆண்பிள்ளைகள் அதிகம் காணொளி விளையாட்டுக்களில் உள்ள கதாப்பாத்திரங்களை முன்மாதிரியாகக் கொள்கிறார்கள், கூட்டுக் குடும்பங்களை விட தனிக் குடும்பத்தில் வசிக்கும் சிறுவர்கள் அதிகம் காணொளி விளையாட்டின் தாக்கத்திற்குள்ளாகின்றார்கள். சிறுவர்களின் வன்நடத்தைக் காரணிகளான உடலியல் காரணி, வாய்மொழிக் காரணி, கோபம் மற்றும் விரோதம் போன்ற காரணிகளில் பால்நிலை அடிப்படையில் வேறுபாடு காணப்படுகின்றது. சிறுவர்கள் வன்முறையான காணொளி விளையாட்டுக்களை மட்டுமன்றி வன்முறையற்ற காணொளி விளையாட்டுக்களை விளையாடுவதாலும் வன்நடத்தைக்குட்படுகிறார்கள் ஆகியன ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் காணொளி விளையாட்டின் தாக்கத்தினால் 44% வீதமான சிறுவர்கள் வன்நடத்தையைக் வெளிப்படுத்துகிறார்கள். அதில் 27% வீதத்தினர் வன்முறையான காணொளி விளையாட்டுக்களை விளையாடுபவர்களாகவும், 17% வீதத்தினர் வன்முறையற்ற காணொளி விளையாட்டுக்களை விளையாடுபவர்களாகக் காணப்படுகின்றனர். அந்தவகையில் வன்முறையான காணொளி விளையாட்டுக்களை விளையாடுபவர்களும், வன்முறையற்ற காணொளி விளையாட்டுக்களை விளையாடுபவர்களும் வன்நடத்தைக்குட்படுகிறார்கள். சிறுவர்களின் வன்நடத்தையில் காணொளி விளையாட்டுக்கள் தாக்கம் செலுத்துகின்றது என்பதும் இவ் ஆய்வின் முடிவாகும்.