Abstract:
விளையாட்டுச் செயற்பாடுகள் இன்றைய காலகட்டங்களில் சர்வதேச மட்டத்தில் பல்பரிணாமத்தைப் பெற்று வருகின்றன. ஆரம்பகாலத்தில் பொழுதுபோக்கிற்காக விளையாட்டானது முக்கியத்துவம் பெற்றிருந்தபோதிலும் தற்போது ஒரு தொழிற்துறையாக மாறியுள்ளதுடன், பல்வேறு துறைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தையும் செலுத்தி வருகின்றது. விளையாட்டுத்துறையில் பால்நிலை வேறுபாடின்றி அனைவரும் ஈடுபடுகின்றனர். பெண்களின் ஒழுங்கமைந்த விளையாட்டு சமீபகாலங்களில் இலங்கையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் பெண்களின் விளையாட்டுச் செயற்பாடுகளானது குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்துள்ள போதிலும் அவர்களின் பங்குபற்றுகையானது சமூக கலாச்சார சூழலினது தாக்கத்திற்கு உட்பட்ட தொன்றாகவே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக உள்ள10ர் கழகங்கள் சார்பாக பெண்கள் விளையாடுதல் என்பது சிரமமானதொன்றாகவே காணப்படுகின்றது. கழகம் சார்பாக பங்குபற்றும் பெண்கள் சமூக, கலாச்சார, பொருளாதார, உடலியல், உளவியல் மற்றும் ஆன்மீகரீதியில் பல்வேறுபட்ட தடைகளை தாண்டி ஈடுபடும் போது அவர்களில் இயல்பாகவே மனஅழுத்தநிலை ஏற்படும். இதனை ஆராயும் பொருட்டு கழகம் சார்பாக விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் எதிர்கொள்ளும் மனஅழுத்தம் எனும் தலைப்பில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் குறிக்கோள்களாக கழகம் சார்பாக விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் எதிர் கொள்ளும் மன அழுத்தத்தை இனங்காணல் மற்றும் மன அழுத்தத்தைத் தூண்டும் காரணிகளை அடையாளங் காணல் ஆகியவை அமைந்தன. இவ்வாய்விற்காக வலிகாமம் தென் மேற்கு பிரதேசத்திற்கான சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களில் அங்கத்தவர்களான விளையாட்டுத்துறையில் ஈடுபடும் 151 பெண்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். ஆய்வுக்கருவியாக ஆய்வாளரால் சுயமாகத் தயாரிக்கப்பட்ட விபரண ஆய்வு வினாக் கொத்து பயன்படுத்தப்பட்டது. தரவுப் பகுப்பாய்வு மேற்கொள்வதற்காக 'விபரணப்புள்ளி விபரவியல் பகுப்பாய்வு'பயன்படுத்தப்பட்டது. மேற்குறித்த ஆய்வானது பல முக்கியமான முடிவுகளை வெளிப்படுத்திற்று. அவையாவன, கழகம் சார்பாக விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடும் போது பெண்கள் அதிகமான மன அழுத்தத்தினை எதிர் கொள்கிறார்கள். அதிகளவான பெண்கள் சமூக அங்கீகாரத்துடன் விளையாட்டில் பங்குபற்றுதலையே அதிகம் விரும்புகிறார்கள். ஏனைய பெண்களை விட அதிக தூரத்திலிருந்து வரும் பெண்களே மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தினமும் பயிற்சியில் ஈடுபடாத பெண்கள் ஏனைய பெண்களை விட மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். பெற்றோரின் பூரண சம்மதத்தோடு கழகம் சார்ந்த போட்டிகளில் ஈடுபடும் பெண்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாவதில்லை. இவ்வாறு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான கையாளுகை நுட்பங்களும் பரிந்துரைக்கப்பட்டன.