Abstract:
மனித பண்பாட்டு படிமலர்ச்சியில் பண்பாட்டு தகவமைப்பு என்பது முதன்மையான ஒன்றாகும். படிமலர்ச்சி பற்றிய சிந்தனையின் முன்னோடியான டார்வின் உலகளாவிய நிலையில் உயிரினங்களின் படிமலர்ச்சி தொடர்பான சிந்தனையினை முன்வைத்துள்ளார். அவருடைய படிமலர்ச்சி பற்றிய சிந்தனையினைத் தொடர்ந்து உலகளாவிய நிலையில் சமூக, பண்பாட்டு படிமலர்ச்சி பற்றிய சிந்தனைகள் தோற்றம் பெற்றன. உயிரினங்களின் படிமலர்ச்சியில் அல்லது சிறப்பினங்களின் தோற்றத்தில் இயற்கையான உயிரியல் தகவமைப்பு என்பது எவ்வளவு முக்கியம் பெறுகின்றது. அவ்வாறே மனித பண்பாட்டு படிமலர்ச்சியிலும் பண்பாட்டுத் தகவமைப்பு முக்கியம் பெறுகின்றது. ஒவ்வொரு பண்பாடும் குறிப்பிட்ட பௌதிக-சமூக சுற்றுச்சூழமைவு நிலவரத்திற்கு ஏற்ப பண்பாட்டு தகவமைப்பினை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. அந்தவகையில் பண்பாட்டு தகவமைப்பு என்பது உலகப் பண்பாட்டுகள் அனைத்துக்கும் பொதுவான ஒன்று. ஆனால் தகவமைப்பில் நிகழும் வேறுபாடுகளே பண்பாட்டு வேறுபாடுகளுக்கும் தனித்துவங்களுக்கும் அடிப்படையாகின்றன. இந்தவகையில் தமிழர் பண்பாட்டு படிமலர்ச்சியில் முதியோரை பராமரித்துக்கொள்வதற்கான ஒரு தகவமைப்பு பொறிமுறையாகவே சந்நிதி கோயிலும் அங்கு நிகழும் முதியோர் பராமரிப்புச் செயன்முறையும் காணப்படுகின்றது.
முதியோர்கள் தொடர்பான பிரச்சினை உலகளாவிய பண்பாட்டுப் பொதுமையாகும். ஒவ்வொரு சமூகமும் முதியோர்களைப் பராமரிப்பதற்கு வேறுபட்ட பொறிமுறைகளை உருவாக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக ஆபிரிக்கப் பண்பாட்டில் முதியவர்களை நூலகமாக மதிக்கும் வழக்கம் காணப்படுகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் முதியோர்களை பராமரித்தற் பொருட்டு அரசும், அரசுசார்பற்ற அமைப்புக்களும் வேறுபட்ட அமைப்புக்களை உருவாக்கியுள்ளன. அவை குறிப்பிட்ட சில விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன. இந்நிலையில் சந்நிதி கோயிலும் அதன் சுற்றுச் சூழலும் முதியோர்களுக்கான சுதந்திரமான பராமரிப்பு நிலையமாகத் தொழிற்படுமாற்றினை இவ்வாய்வு வெளிக்கொண்டு வருகின்றது.
சந்நிதி கோயிலில் மேற்கொள்ளப்பட்ட களாய்வின் மூலம் பெறப்பட்ட பண்புசார் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. சேகரிக்கப்பட்ட பண்புசார் தரவுகளை மையமாகக்கொண்ட கருப்பொருள் பகுப்பாய்வின் வழியாக முதியோர்களின் சுதந்திரமான வாழ்விற்கு சந்நிதிக் கோயிற்ச் சூழலும் அதனோடிணைந்த சமூக அமைப்புக்களும் எவ்வகையில் பங்களிப்புச் செய்கின்றது என்பது வெளிப்படுத்தப்படுகின்றது. வேறுபட்ட சமூக காரணிகளின் விளைவாக தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தங்களுடைய சொந்த வாழ்விடங்களைவிட்டு வருகின்ற முதியவர்களுக்கு சந்நிதிகோயிற் சுற்றுச்சூழமைவு மிகவும் ஏற்றதாக அமைகின்றமை இங்கு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரமான முதுமை வாழ்வினை மேலும் வளப்படுத்துவதற்கு ஏற்றவகையில் அரசு, அரச சார்பற்ற அமைப்புக்கள் தங்களுடைய சமூகப் பணிகளை எவ்வகையில் மேலும் விரிவாக்கம் செய்ய முடியும் என்பது தொடர்பான பரிந்துரைகளும் இவ்வாய்வின் வழியாக முன்வைக்கப்படுகின்றது.