dc.description.abstract |
நகர்கட்டுமானக்கலை தொடர்பிலான விழிப்புணர்வும் அறிகைக் கையளிப்பும் இந்துப்பண்பாட்டுப் புலத்துக்குப் புதியதல்ல. ஆகமங்கள், வாஸ்து-சில்பசாஸ்திரங்கள் அர்த்தசாஸ்திரம் ஆகியவற்றில் இக்கலையானது முறைசார் அறிவியலாகப் (Formal Science) பிரேரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நகர உருவாக்கம் என்பது நன்கு திட்டமிடப்பட்டு அளவுப் பிரமாணரீதியாக முன்னெடுக்கப்பட்டமையினை அறியமுடிகிறது. குடியிருப்பு நோக்கம், வர்த்தக நோக்கம், துறைமுக மற்றும் தொடர்பாடல் நோக்கம், பாதுகாப்பு நோக்கம், பரிபாலன நோக்கம், கல்வி மற்றும் ஆன்மீக மேம்பாட்டு நோக்கம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டன. குறித்த நோக்கங்களுக்கு முன்னுரிமையளித்து நிர்மாணிக்கப்பட்ட நகரங்களுக்கு விசேட காரணச்சிறப்புப் பெயர்கள் வழங்கப்பட்டன. மானசாரம், மயமதம், சில்பரத்தினம், சுக்கிரநீதி ஆகிய நூல்களில் நகர, ராஜதானி துர்க, பட்டினம், கேத, கர்வத, சிபிர, ஸ்தானீய, துரோணமுக, கோடிய-கோளகா,நிகம, மாதா எனப் பன்னிரண்டு வகையான நகரமைப்புக்கள் இவ்வகையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மக்கள் தொகைப்பரம்பல் தரைத்தோற்ற அமைப்பு அனர்த்த முகாமைத்துவம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு தண்டகம், சதுர்முகம், சர்வதோபத்திரம் நந்தியா வர்த்தகம், பத்மகம், சுவஸ்திகா, பிரஸ்தரம், கார்முகம் ஆகிய எட்டுவித நகர் மாதிரியுருக்கள் முன்மொழியப்பட்டன. நகரத் திட்டமிடலுக்காக வலையங்களை வரையறை செய்யும் போது 'பதன்யாச' எனும் அளவீட்டு விதிமுறை பின்பற்றப்பட்டது. வீதிவலைப்பின்னல் வடிகால் அமைப்பு ஆகியவற்றிலும் விசேட கரிசனை செலுத்தப்பட்டது. இத்தகையதோர் பின்னணியில் இந்துப் பண்பாட்டுப் புலத்தில் விரவியிருந்த நகரமைப்புமாதிரிகள் மற்றும் நகர்த்திட்டமிடல் சார்ந்த எண்ணக்கருக்களைப் பொருத்தமான சான்றாதாரங்களுடன் எடுத்துரைப்பதும், பகுப்பாய்வு செய்ய முயல்வதுமே இவ்வாய்வுக் கட்டுரையின் பிரயத்தனமாகும். |
en_US |