Abstract:
சிவாகமங்கள் சிவாலயத்தின் அமைப்பு, கிரியை முறை, வழிபாட்டு மரபு என்பவற்றின் மூலநூல்களாகும். சிவாலயங்களின் அமைப்பு விதிமுறைகளைச் சிவாகமங்களும், சிற்பசாஸ்திரங்களும் மிகவிரிவுபடக்கூறுகின்றன. சிவனைப்பிரதானமூர்த்தியாகக் கொண்ட சிவாலயமானது பிராகாரங்கள், மண்டபங்கள், கோபுரங்கள், எனும் கலைத்துவ அம்சங்களுடன் பரிவாராலயங்கள், மூர்த்திபேதங்களின் ஸ்தானம், ஏனைய மண்டபங்கள் என விரிவுபடும் தன்மையுடையது. சிவாலயங்களில் எத்தகைய ஸ்தானத்தில் எவ்வெவ் தெய்வங்கள் பரிவாரதேவர்களாக அமையத்தக்கவை என்பதனைச் சிவாகமங்கள் விரிவாகக்கூறுகின்றன. சிவாலயங்களில் இடம்பெறும் பரிவாரங்களது ஸ்தாபனவிதிமுறைகளைச் சைவத்தின் முதல் நூல்களாக விளங்குகின்ற சிவாகமங்களை அடிப்படையாகக்கொண்டு எடுத்துக்கூறுவது இவ்வாயிவின் பிரதான நோக்கமாகும். சிவாகமங்கள் இருபத்தெட்டாகும். எனினும் பரிவாரஸ்தாபனவிதிபற்றிச் சிறப்பாகக் கூறுகின்ற காரணாகாமம் இவ்வாய்வின் மூலநூலாகும். ஏனைய சிவாகமங்களிற் கூறப்படும் விடயங்கள் துணைமூலங்களாக அமைகின்றன. இவ்வாய்வானது விபரணாய்வு முறை, பகுப்பாய்வு முறை ஆகிய ஆய்வுமுறைகளில் மேற்கொள்ளப்படுவதுடன் காரணாகமத்தில் கூறப்படுகின்ற விடயங்களை ஏனைய சிவாகமங்களுடனும், சிற்பசாஸ்திரங்களுடனும் ஒப்பிட்டுக் கூறுவதினால் ஒப்பீட்டாய்வு முறையும் பயன்படுத்தப்படுகின்றது. சமகாலவழக்கில் சிவாலயங்களிற் பரிவாரதேவர்களைப் பிரதிஸ்டைசெய்வதிலும், பரிவாராலயங்களை அமைப்பதிலும் பலசவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன. ஆதலால் சிவாகமங்கள் கூறுகின்ற பரிவாரஸ்தாபன விதிமுறைகளை ஆராய்வதாகவும் இவ்வாய்வு அமைகின்றது. சிவாலயங்களின் கட்டமைப்பில் பரிவாராலயவிரிவு, புனருத்தாரணம், அமைவு, ஸ்தானம் பற்றி ஐயங்கள் ஏற்படுமிடத்து அவற்றுக்குப் பிரமாணபூர்வமாக ஆதாரப்படுத்திக்கூறக்கூடிய விதிமுறைகளை இவ்வாய்வு தெளிவுபடுத்தமுனைகின்றது.