dc.description.abstract |
சங்க காலத்தில் பல தெய்வ வழிபாடுகள் இருந்தன என்பதைச் சங்கச் சான்றோர் பாடல்களால் அறியலாம். திருமால், முருகன், கொற்றவை, வருணன், இந்திரன் முதலான தெய்வங்களைப் பற்றிய தகவல்கள் உள்ளன. சிவன் பற்றிய செய்திகளைப் புறநானூறு முதலான நூல்களில் காணலாம். பல தெய்வ வழிபாடுகள் மக்களிடையே இருந்தபோதிலும் சமயக் காழ்ப்புணர்ச்சியோடு மக்கள் நடந்து கொண்டதற்கான சான்றுகளை எந்த நூல்களிலும் காண முடியவில்லை. திருமாலும் முருகனும் அன்றைய மக்களால் பெரிதும் போற்றப்பட்டுவந்த தெய்வங்கள் என அறிய முடிகிறது. அவற்றுள்ளும் திருமாலைப் பற்றிய பாடல்களைப் பார்க்கும் போது “திருமாலே எல்லாம்” என்ற உணர்ச்சி தோன்றுமாறு அப்பாடல்வரிகள் அமைந்துள்ளன. திருமாலுக்கே “முழு முதன்மை” பேசப்படுகிறது என்று வைணவ மதத்தார் கூறுமளவிற்குத் திருமால் வழிபாடு சங்க நூல்களில் பேசப்பட்டதால் அத்திருமால் பற்றிய செய்திகள் சங்க காலத்தில் எவ்வாறிருந்தது என்பதைக் காணும் முயற்சியே இங்கு மேற்கொள்ளப்படுகிறது. சங்க இலக்கியங்களில் திருமாலைக் குறிக்கும் பெயரமைதிகள், திருமாலின் பண்பமைதிகள், திருமாலின் சிறப்பு, திருமாலும் திருமகளும், முல்லை நிலத்தில் திருமாலின் வகிபங்கு பற்றிய பல செய்திகள் இக்கட்டுரையில் உள்வாங்கப்பட்டு வெளிப்படுத்தப்பெறுகிறது. திருமால் பற்றிய ஆய்வு நிகழ்த்தும் இப்பகுதியில் சங்க இலக்கியங்களிலிருந்து பெறப்படும் தகவல்கள் முதன்மை ஆதாரங்களாகக் கொள்ளப் பெறுகின்றன. சங்க இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றுள்ள பிற நூல்களும் இவ்வாய்வில் எடுத்தாளப் பெறுகின்றன. மேலும், திருமால் வழிபாடு வைதிக சமயத்தைச் சார்ந்திருப்பதால் வேதநெறியை விளக்கும் வடமொழி நூல்களின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளன. |
en_US |