Abstract:
பல்லினப் பண்பாடு கொண்ட இலங்கையின் எல்லாப் பிராந்தியங்களுக்கும் தனித்துவமான பாரம்பரியம் இருப்பதாக கூறமுடியாது. ஆயினும் இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் மிகநீண்டகால வரலாற்றையும், தொடர்ச்சியான பண்பாட்டு பாரம்பரியங்களையும் கொண்ட பிரதேசம் என்பதை வரலாற்றிலக்கியங்களும், தொல்லியல் சான்றுகளும் உறுதிப்படுத்தி வருகின்றன. தமிழ்மக்களை முதன்மைப்படுத்தும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய பண்பாட்டில் சமகாலத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தனித்துவமான பண்பாட்டம்சங்கள் பல மருவியும், மாற்றமடைந்தும் வருகின்றன. இதனால் யாழ்ப்பாணத் தமிழர்களினுடைய பாரம்பரிய பண்பாட்டுக்கூறுகளாக காணப்படுகின்ற பாரம்பரிய சமையலறை புழங்குபொருட்கள் எவை மருவி வருகின்றன? எவை மறைந்துள்ளன? எவை இன்னும் புழக்கத்தில் உள்ளன? என்பதை இனங்கண்டு மாறிவரும் வாழ்க்கை முறையில் மறைந்து போகும் புழங்கு பொருட்களை புதிய சந்ததியினர் அறிந்து கொள்ள உதவுவதோடு எமது பழைமையையும் இருப்பையும் உறுதிப்படுத்த பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல் போன்றன இவ்வாய்வின் நோக்கங்களாகும். ஆய்விற்காக முதலாம் நிலைத்தரத்தரவுகளாக தமிழ்ப்பேரகராதி, தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி, திருக்குறள், ஆங்கில அகராதி போன்றவற்றுடன் கலந்துரையாடல், களஆய்வு, நேரடிஅவதானம் மூலம் பெறப்பட்ட தரவுகள் என்பவற்றை அடிபப்டையாகக் கொண்டும் இரண்டாம் நிலைத்தரத்தரவுகள் என்ற வகையில் பண்பாடு, புழங்குபொருட்கள் தொடர்பான நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், இணைத்தளங்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டும் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1970களிற்கு பிற்பட்ட காலப்பகுதியில் உலகமயமாக்கல் செயன்முறை முனைப்பு பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு இனங்கள் கலந்து வாழும் சமுதாய நிலையாலும், உலகம் சுருங்கிவிட்ட நிலையிலும் ஒவ்வொரு சமூகத்தினதும் மரபுவழிப்பண்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன, ஏற்பட்டு வருகின்றன. வெகுஜன ஊடகங்களின் வளர்ச்சி, கல்விதொழில் வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிகமோகம் போன்றவற்றால் நீண்டகாலமாக தனித்தன்மை சிதையாதவாறு பாதுபாக்கப்பட்டு வந்த யாழ்ப்பாணப் பண்பாட்டில் மிக வேகமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக உணவுமுறைகள், ஆடைகள், விளையாட்டுக்கள், குடும்ப சமூக உறவுகள், சமயநம்பிக்கைகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள், பாரம்பரியகலைகள், பாரம்பரிய புழங்குபொருட்கள் போன்றன மாற்றமடைந்து வருகின்றன. இவற்றுள் பாரம்பரிய புழங்குபொருட்கள் என்பவை பண்பட்டதொரு சமுதாயம் வாழ்ந்தமைக்கான அடையாளமாகக் காணப்படுகின்றன. இப்புழங்குபொருட்கள் ஊடாக யாழ்ப்பாண மக்களின் பண்பாடு, வாழ்வியல்முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். புழங்குபொருட்களானவை உணவுசார் புழங்குபொருட்கள், வீட்டுப்பயன்சார் புழங்குபொருட்கள், தொழில்சார் புழங்குபொருட்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகைப்பாட்டில் இருந்து உணவு தயாரித்தல். உணவு உண்ணல், உணவைப்பேணி, சேமித்து வைத்தல் போன்றவற்றுக்குப் பயன்படும் புழங்குபொருட்களை சமையலறை புழங்குபொருட்கள் என்ற வகைப்பாட்டுக்குள் கொண்டுவந்து இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சமையலறை புழங்குபொருட்களான அகப்பை, அரிவாள், அம்மிக்கல், அரிக்கன்சட்டி, ஆட்டுக்கல், இடியப்பஉரல், உரல், உலக்கை, உறி, கத்தி, கிடாரம், குலவிக்கல், கொத்து, சத்தகம், சுண்டு, சுளகு, சூட்டடுப்பு, செம்பு, தட்டகப்பை, தட்டுக்கல், தாம்பாளம், திருகணை, துருவலகை, தூக்குச்சட்டி, மண்பானை, மண்சட்டி, மண்குடம், பிழா, பெட்டி, மத்து, மூக்குப்பேணி, வெற்றிலைத்தட்டம், திரிகல் போன்றன யாழ்ப்பாண மக்களின் பயன்பாட்டிலிருந்தன. இவை சமையலறை புழக்கபொருட்களாக மட்டுமல்லாது பல்வேறு காரணிகள், நம்பிக்கைகள் பொதிந்தவையாகவும் சடங்குசார் புழங்குபொருட்களாகவும் புழக்கத்திலிருந்தன. சமகாலத்தில் மட்பாண்டத்தில், பித்தளை, செம்பு, இரும்பு, பனையோலையினால் செய்யப்பட்ட இச்சமையலறை புழங்குபொருட்களின் பாவனை குறைந்து அதற்குப்பதிலாக நவீனவகைப் பாத்திரங்கள், இயந்திரங்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. அதேவேளை சடங்குகள், விழாக்களின் போது பயன்படுத்தப்படும் சத்தகம், கொத்து, உரல், உலக்கை, அம்மிக்கல், குலவி, செம்பு, மண்குடம் போன்ற சமையலறை புழங்குபொருட்கள் சமகாலத்தில் நாளாந்த சமையல் பாவனையில் பயன்படுத்தப்படாத போதும் மங்கல, அமங்கல சடங்குகள், கோயில்விழாக்களில் அத்தியாவசிய பொருட்களாக இன்றுவரையும் யாழ்ப்பாண மக்களின் பண்பாட்டை அடையாளப்படுத்தி நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளது. இதனால் இப்பொருட்களின் தேவை உள்ள வரை பண்பாட்டில் இவை நிலைத்திருக்கும்.