dc.description.abstract |
போத்தலில் அடைக்கப்பட்ட நீர் இலங்கையில் 1980களின் இறுதியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான சந்தை 1990களின் இறுதியிலேயே விரிவடைந்தது. ஆனால் போத்தல் நீருக்கான முறையான சந்தை ஆய்வுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. எனது ஆய்வின் நோக்கம் போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கான கேள்வி அதிகரித்து வரும் நிலையில் இதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் எவை? அதில் எது கூடுதலாக செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை குறித்த பிரதேசத்தை மையமாக வைத்து ஆய்வு செய்வதாகும். முதலாம் நிலைத் தரவுகளாக வினாக்கொத்து, மற்றும் பேட்டி முறை மூலம் தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இரண்டாம் நிலைத் தரவுகளாக நீர் விநியோகம் செய்யும் முகவர் நிலையத் தகவல் அறிக்கை, மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபர அறிக்கை என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் போத்தலில் அடைக்கப்பட்ட நீரினை பருகுகின்றவர்களில் 100 பேர் மாதிரியாக எடுக்கப்பட்டனர். பொருளாதார ஆய்வு முறையாக பல்மாறி பிற்செலவுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிரதேசசெயலர் பிரிவில் தண்ணீர்ப் போத்தல்களுக்கான கேள்வியைத் தீர்மானிக்கும் காரணிகளாக தரமானது என்ற எண்ணம், விலை, சுவை, மக்களின் கல்வியறிவு, நிலக்கீழ் நீரின் மாசுத்தன்மை, மாற்று நீர்மூலங்கள், குடியிருப்பு நிலைமை என்ற பல காரணிகள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அதில் விலை மற்றும் மாற்று நீர்மூலங்கள் என்பவை பொருண்மைத் தன்மையற்றவையாகவும் ஏனைய ஐந்து மாறிகளும் பொருண்மைத் தன்மையுடையவையாகவும் உள்ளன. இவற்றில் குடியிருப்பு நிலைமை கூடுதலானளவு எதிர்க்கணிய ரீதியான தாக்கம் செலுத்துவதையும், அடுத்த நிலையில் கல்வியறிவு மட்டம், சுவை என்பன தாக்கம் செலுத்துவதையும் காணமுடிகிறது. மேலே காட்டிய ஏழு சாரா மாறிகளில் ஐந்து புள்ளிவிபரரீதியாகக் பொருண்மைத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. துணிவுக்குணகம் R-squared = 0.7598 ஆகவும், சரிப்படுத்தப்பட்ட துணிவுக்குணகம் Adj R-squared = 0.7415 ஆகவும் உள்ளது. அதாவது தண்ணீர்ப் போத்ததல்களுக்கான கேள்வியில் எடுக்கப்பட்ட மாறிகள் 75% வகை கூற ஏனைய 25% ஆய்வுக்கு எடுக்கப்படாத மாறிகளால் விளக்கப்படுகிறது. 5% பொருண்மைமட்டம் இங்கு கவனிக்கப்படுகிறது. முழுமொத்த மாதிரியும் பொருண்மைத் தன்மையுடையது என்பதை F பெறுமதி காட்டிநிற்கிறது. |
en_US |