Abstract:
உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையானது மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதுடன் இலங்கையில் அதிகளவு அந்நியச் செலவாணி வருமானத்தை ஈட்டித்தரும் துறையாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் இவ்வாய்வானது ''பூநகரியில் கௌதாரமுனைப் பிரதேசத்தில் சுற்றுலா விருத்திக்கான வளவாய்ப்புக்களும் சவால்களும்'' எனும் தலைப்பில் இடம்பெறுகின்றது. இதன் பிரதான நோக்கமாக ஆய்வுப் பிரதேசத்திலுள்ள சுற்றுலா விருத்திக்கான வளவாய்ப்புக்களின் தற்போதைய நிலைமையினை அடையாளப்படுத்தல், அங்கு காணப்படும் அபிவிருத்திச் சவால்களை இனங்காணுதல் மற்றும் சுற்றுலாத்துறையின் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்திக்கான தந்திரோபாயங்களை முன்மொழிதல் போன்றவற்றை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. இந்தவகையில் உள்நாட்டுப்போர் முடிவுற்ற நிலையும் அதனுடன் இணைந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை அதிகரித்து வருகின்ற நிலைமை பலமாகவும், சுற்றுலா அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கென உள்ளூரில் சரியான நிறுவனக் கட்டமைப்புக்கள் இல்லாமை மற்றும் போக்குவரத்து வசதி சீரின்மை போன்றன பலவீனமாகவும், சூழலியல் சுற்றுலா மற்றும் சுற்றுலா அபிவிருத்தி பிரதேசமாக தெரிவு செய்யப்பட்டமை சந்தர்ப்பமாகவும், அபாயம், உயர்பாதுகாப்பு வலயங்கள், போதைப்பொருட்கள் பாவனை போன்றன அச்சுறுத்தலாகவும் காணப்படுகின்றது. எனவே பூநகரியில் கௌதாரிமுனைப் பிரதேசத்தில் காணப்படும் சுற்றலாத்துறை விருத்திக்கான வளவாய்ப்புக்கள், சவால்களை இனங்கண்டு அபிவிருத்திக்கு தேவையான தந்திரோபாயத் திட்டங்களை முன்மொழிவதன் மூலம் பூநகரி பிரதேசத்தை நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு இட்டுச்செல்ல முடியும்.