Abstract:
பொருளாதார விருத்திக்குப் பங்களிப்புச் செய்கின்ற துறைகளில் ஒன்றாக கைத்தொழில் துறை காணப்படுகின்றது. அதில் நெசவுக் கைத்தொழிலும் ஒன்றாகும் ''நெசவாளர்கள் எதிர் நோக்கும் சவால்கள் கல்முனைப் பிரதேசத்தின் மருதமுனைக் கிராமத்தினைச் சிறப்பாகக் கொண்டது'' எனும் தலைப்பில் இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெசவாளர்கள் எதிர் நோக்கம் சவால்களை அடையாளப்படுத்தி நெசவு உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்களை இலகுவாகவும் குறைந்த விலையிலும் பெற்றுக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்தல், ஏற்றுமதியை ஊக்கப்படுத்தல் போன்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வில் மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த 70 நெசவாளர்கள் எழுமாற்று மாதிரி எடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வுக்கான முதலாம், இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. முதலாம் நிலைத் தரவுகள் வினாக் கொத்து, நேர்காணல் மூலமும் இரண்டாம் நிலைத் தரவுகள் முன்னைய ஆய்வுகள், பத்திரிகைகள் மற்றும் அறிக்கைகளின் மூலம் பெறப்பட்ட தரவுகள் SPSS தரவுப் பகுப்பாய்வு முறையினைக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வுப் பிரதேசத்தின் நெசவாளர்கள் எதிர் நோக்கும் சவால்களுக்கு இந்த ஆய்வின் மூலம் தீர்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. நெசவு உற்பத்திக்கான மூலப் பொருட்களுக்கும் உற்பத்திப் பொருட்களுக்குமான விலை என்பது தீர்மானிக்கப்படாத நிலையில் காலத்துக்கு ஏற்ப மாற்றமடையக் கூடியதாகவுள்ளது, அத்துடன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நெசவாளர்களில் 90% நெசவாளர்கள் ஏனைய தொழில் சார் கல்வியைக் கற்க உடன்படுகின்றவர்களாகவும், 88% நெசவாளர்கள் தங்களது பிள்ளைகள் தொடர்ந்து நெசவுத் தொழிலினை மேற்கொள்வதனை விரும்பாதவர்களாகவே காணப்படுகின்றார்கள். இம்மக்களின் நெசவு உற்பத்தியானது இப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தியில் 67.697% பங்களிப்பினை வழங்குகின்ற அதே வேளை கிழக்கு மாகாணத்தின் மொத்த உற்பத்தியிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குவதனை இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.