Abstract:
ஈட்டுக்கடன்களும், கிராமியத்துறை அபிவிருத்தியும்'' என்ற இந்த ஆய்வினை எடுத்து நோக்குவாமாயின் இன்றைய உலகப் பொருளாதாரங்களில் கிராமியத்துறைசார் அபிவிருத்தியினை முன்னெடுத்துச் செல்வதில் நிதிநிறுவனங்களானவை மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றன. இருப்பினும் அவற்றின் பிரதான நோக்கம் இலாபம் உழைத்துக் கொள்வதாகும். தமது நிறுவனம் இலாபத்தினை உழைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவை செயற்படுகின்றன. இவற்றுள் ஈட்டுக்கடன் என்பது இன்றைய பொருளாதார உலகில் சிறப்பானதொரு கடன் நடவடிக்கையாகக் காணப்படுகிறது. இங்கு சார்ந்த மாறியாக கிராமிய அபிவிருத்தியும், சாராத மாறியாக ஈட்டுக்கடன்களும் காணப்படுகின்றன. இலங்கையின் வட பகுதியின் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசத்தினை மையமாகக் கொண்டே இங்கு ஆய்வானது மேற்கொள்ளப்படுகின்றது. ஆய்வின் பிரதான நோக்கமாக கிராமிய அபிவிருத்தியில் ஈட்டுக்கடன்களின் வகிபாகத்தினைக் கண்டறிதல் என்பதும் துணை நோக்கங்களாக கிராமிய அபிவிருத்தியில் ஈட்டுக்கடன்களினைப் பெறுவதற்கு முன்னரான அபிவிருத்தி நிலையினை கண்டறிதல், கிராமிய அபிவிருத்தியில் ஈட்டுக்கடன்களினைப் பெற்றதற்கு முன்ரான அபிவிருத்தி நிலையினை கண்டறிதல் ஆய்வின் கருதுகோள்களாக கிராமிய அபிவிருத்தியில் ஈட்டுக்கடன்களின் செயற்பாடுகள் ஏனைய கடன்களை விட அதிகளவாகக் காணப்படுகின்றது என்பதும் ஈட்டுக்கடன்கள் அதிகரிக்கின்ற போக்கானது மக்களின் சொத்துக்களின் அளவிற்கேற்ப வேறுபட்டுச் செல்கின்றது என்பதும் காணப்படுகின்றது. இங்கு 42 கிராம அலுவலர் பிரிவுகளில் எளிய எழுமாற்று அடிப்படையில் 05 வீதம் மாதிரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்விலே எடுத்துக்கொள்ளப்பட்ட கருதுகோள்களின் படி, கிராமிய அபிவிருத்தியில் ஈட்டுக்கடன்களின் செயற்பாடுகள் ஏனைய கடன்களை விட அதிகளவாகக் காணப்படுகின்றது. என்ற கருதுகோளானது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருதுகோளாகக் காணப்படுகின்றது. ஏனெனில் ஈட்டுக்கடன்களில் வைப்புச் செய்கின்ற போது மக்களிற்கு பாதுகாப்புத் தன்மை என்பது அதிகளவாக இருப்பதனை அவதானிக்க முடிகின்றது. ஈட்டுக்கடன்கள் அதிகரிக்கின்ற போக்கானது மக்களின் சொத்துக்களின் அளவிற்கேற்ப வேறுபட்டுச் செல்கின்றது என்ற கருதுகோளானது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருதுகோளாகக் காணப்படுகின்றது. அதாவது மக்களின் சொத்துக்களின் அளவிற்கேற்ப கடன்களின் அளவும் வேறுபட்டுச் செல்வதனை அந்த ஆய்வில் அவதானிக்க முடிகின்றது.