dc.description.abstract |
இலங்கையில் வடபுலத்தே, வடமாகாணத்தில், அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடா நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலர் பிரிவுகள் ஆய்வுப்பிரதேசங்களாகவும் இப்பிரதேசங்களில் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பாக கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்பது ஆய்வுக்கான கருப்பொருளாகவும் கொண்ட வகையில் இந்த வகையில் இந்த ஆய்வு அமைந்துள்ளது.
இன்று உலக நாடுகள் பலவும் கைத்தொழில் துறையில் அதிக கவனம் செலுத்தி அதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் என்ற அந்தஸ்தினை அடைந்துள்ளன. மேலும் வளர்ந்து வரும் நாடுகளில் கூட கைத்தொழில் துறையே முன்னெடுத்துச் செல்லப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. இந்த வகையில் இலங்கையில் கூட 1977 ஆம் ஆண்டிற்குப் பின்னர் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகமாகிய நிலையில் கைத்தொழில் உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதுடன் பல ஊக்குவிப்புகளும் வழங்கப்பட்டதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்த பின்னணியில் இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி சம்பாத்தியம் போன்றவற்றில் கைத்தொழில் துறையின் பங்களிப்பு முக்கிய இடம் பெற்றுள்ளது. அதே நேரம் இலங்கையின் வடக்கே இதன் பலாபலன்கள் கிடைக்கவில்லை. அதற்கு திறந்த பொருளாதாரம் பின்பற்றப்பட்ட காலகட்டத்தில் இருந்து குறிப்பாக 3 தசாப்தங்களாக வடபகுதியில் உள்நாட்டு யுத்த சூழ்நிலைகளும் அதன் நேரடியான மற்றும் மறைமுகமான விளைவுகளும் இணைந்து வட பகுதியில் கைத்தொழில் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களை உருவாக்கத்தவறி விட்டது. எனவே இன்று யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஒட்டு மொத்த இலங்கைப் பொருளாதாரத்தின் அபிவிருத்தி பற்றியும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் அபிவிருத்தி பற்றியும் பல சர்வதேச தரப்பினர் உட்பட பல தரப்பினரும் அக்கறை கொண்டிருப்பதால் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலர் பிரிவுகளில் கைத்தொழில் அபிவிருத்திக்கான வாய்ப்புக்ககள் என்ற விடயம் தொடர்பாக ஆய்வு செய்வதாகவே இந்த ஆய்வு அமைந்துள்ளது.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு பிரதேச ரீதியாக வளங்களை இனங்காண்பதும் அவற்றை வினைத்திறனான முறையில் பயன்படுத்துவதற்கான அபிவிருத்திதிட்டங்களும் அவசியமாக உள்ளது. இந்த வகையில் கைத்தொழிற்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வளங்கள் காணப்படுகின்றன. எனவே இவற்றை உரிய முறையில் பயன்படுத்தும் போது கைத்தொழிலுக்கான வாய்ப்புக்களை விரிவுபடுத்தலாம்.
இந்த வகையில் இந்த ஆய்வில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களும் கைத்தொழிலுக்கான வாய்ப்புகளும் என்ற விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. அத்துடன் ஆய்வுப்பிரதேசமானது கைத்தொழில் சார்பாக எதிர்நோக்கும் சவால்களை வெளிக்கொணர்வதுடன் எவ்வாறு அத்தகைய சவால்களுக்கு முகம் கொடுத்து கைத்தொழில் அபிவிருத்தியினை ஏற்படுத்தலாம் என்பதனையும் அதற்கான விதந்துரைகளையும் இனங்கண்டு முன்வைப்பதாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கைத்தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வளங்கள் காணப்படுகின்றன. எனவே அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் கைத்தொழில்வாய்ப்புக்களை விரிவாக்கலாம். ஏனெனில் பொருளாதார அபிவிருத்திக்கு கைத்தொழில் துறையின் பங்களிப்பு என்பது மிகமுக்கியமான ஒன்றாகும். காரணம் வளங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கைத்தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் வருமான ஏற்றத்தாழ்வு குறைவடையும். இதனூடாகப் பொருளாதார அபிவிருத்தியினை ஏற்படுத்த முடியும்.
உலகளாவிய ரீதியில் உள்ள கைத்தொழில்கள், இலங்கையில் உள்ள கைத்தொழில்கள், என்பவற்றோடு ஒப்பிட்டு நோக்கும் போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கைத்தொழில்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் மிகப்பல ஆனால் அத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் மிகமிகக் குறைவாக இருப்பதுடன் எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளைக் கூடச் செயல்படுத்துவது என்பதும் ஆமை வேகத்திலேயே நடைபெற்றது நடைபெற்று வருகின்றது. இதனால் இக்கைத்தொழில்கள் பழைய நிலையை அடைவதென்பதோ அல்லது வளர்ச்சிப்பாதையில் காலடி வைப்பது என்பதுவோ எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே இக்கைத்தொழிற்சாலைகளை வளர்ப்பதற்கான புனரமைப்பதற்கான அல்லது புதிதாக ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள் விரைவாகவும் ஒழுங்காகவும் எப்பொழுது மேற்கொள்ளப்படுகின்றதோ அப்பொழுதுதான் இப்பிரதேசத்தின் கைத்தொழில்கள் வளர்ச்சிப்பாதையில் காலடி எடுத்து வைப்பதுடன் ஆய்வுப்பிரதேசங்களில், யாழ்ப்பாணக் குடாநாட்டில், வடமாகாணப் பொருளாதாரத்தில், மட்டுமன்றி ஒட்டு மொத்த இலங்கைப் பொரளாதாரத்திலும் தனது பங்களிப்பை வழங்க முடியும். |
en_US |