Abstract:
பல்லின சமூகத்தினை உள்ளடக்குகின்ற யாழ்ப்பாண பிரதேசத்தில் மக்களுக்கென அச்சமூகத்தில் தனியான சிறப்பு அவர்களுக்கென நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியமும் உண்டென்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
யாழ்ப்பாணத்தில் இவர்களது ஆரம்பகாலக் குடியேற்றம் தொடர்பாக பலதரப்பட்ட செய்திகள் காணப்பட்ட போதும்
யாழ்ப்பாணத் தமிழரசர்களின் காலத்துடன் தான் இவர்களது ஆரம்பகாலக் குடியேற்றங்கள் யாழ்ப்பாணப்
பிரதேசத்தில் நல்லூரினை அண்டிய பகுதிகளில் ஏற்பட்டமைக்கான அதிகளவு சான்றுகள் கிடைத்துள்ளன.
அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் மற்றும் போர்த்துக்கேய ஆவணங்களில் காணப்படுகின்ற
குறிப்புக்கள் இவற்றினை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன. இருப்பினும் யாழ்ப்பாணத்திற்கும்
இஸ்லாமியர்களுக்கிடையிலான தொடர்புகள் ஏறத்தாள கி.பி 8ஆம் நூற்றாண்டில் இருந்தே இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது. இவ்வாறு யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்கள், போர்த்துக்கேயர்கள் மற்றும்
டச்சுக்காரர்கள் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்களது ஆட்சிக்காலங்களிலும் சுதந்திரத்தின் பின்பாகவும்
பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வந்த போதும் கூட யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இலங்கை முழுவதிலும்
தங்களுக்கேயுரிய தனித்துவமான சமூகப், பொருளாதார, பண்பாட்டு அடையாளங்களைப் பின்பற்றி வந்தவர்களாகவே
இன்றுவரை காணப்படுகின்றனர். இத்தகைய சிறப்புக்களுடன் வாழ்ந்த இவர்கள் நாட்டிலேற்பட்ட அசாதாரண சூழ்நிலை
காரணமாக 1990 இன் இறுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு இலங்கையின் பிறபகுதிகளுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாய
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இருப்பினும் பல வருட இடைவெளியின் பின்பாக நாட்டில் ஏற்பட்ட சமூக நிலையினைத்
தொடர்ந்து இன்று மீளவும் யாழ்ப்பாணத்தில் தாங்கள் வசித்த சொந்த இடங்களில் படிப்படியாக மீளக்குடியேறி வருகின்றனர்.