Abstract:
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இனப்பிரச்சனையானது நீண்டதொரு வரலாற்றுப் பின்னணியினைக்
கொண்டதென்பதனை எவரும் மறுக்க முடியாது. இத்தகைய இனப்பிரச்சினையானது இலங்கையில் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில்
அதனது அயல்நாடான இந்தியாவிலும் இதனது தாக்கமானது பல்வேறு வழிகளில் செல்வாக்கினைச் செலுத்த
ஆரம்பித்திருந்தது. அதிலும் குறிப்பாகத் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்ற தமிழ்நாட்டில் இதனது
தாக்கமானது சற்று அதிகமாவே காணப்பட்டதெனலாம். இதனால் அம்மாநில அரசு நேரடியாகவே இலங்கைத்தமிழர்
பிரச்சினையில் தனது கவனத்தைச் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இத்தகையதொரு பின்னணியிலேதான் தமிழகத்தில்
ஆட்சியில் அமர்ந்திருந்த முதலமைச்சர்களிலொருவரான ஜெயலலிதாவும் இலங்கைத்தமிழர் பிரச்சினையில் தனது
பார்வையினைச் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் இத்தகைய இவரது இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பான பார்வையானது
ஒருமுகப் பார்வையாக அல்லாது இரு முகப்பார்வையாக இருவேறு காலகட்டங்களில் இருந்தமையினை அவதானிக்க
முடிகின்றது. ஒன்று இலங்கையில் சிவில் யுத்தமானது நடைபெறுவதற்கு முன்னரான அவரது பார்வை. மற்றையது சிவில்
யுத்தம் முடிவடைந்தமையின் பின்னரான பார்வை. இவ்வாறான ஜெயலலிதாவினது இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பான
பார்வைகள் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவை. அவ்வகையில் இத்தகைய இவரது இரு முகப்பட்ட பார்வைகளிலொன்று
இலங்கைத் தமிழர் சார்பற்றதாகவும் அவர்களது போராட்டங்களுக்கு எதிரானதாகவும் காணப்பட்டது. மற்றையது
அவர்களுக்கு சார்பானதாகவும் அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் அமைந்திருந்தது. இலங்கைத் தமிழர்
விடயம் பொறுத்து அவர் எடுத்திருந்த இத்தகைய நிலைப்படானது ஜெயலலிதாவினது அரசியல் இராஜதந்திரத்தினையே
உணர்த்தி நிற்கின்றது. இவ்வாய்வானது வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் ஒப்பீட்டு முறையியல்,
பகுப்பாய்வு முறையியல் என்பவற்றின் உதவியுடன் ஆராயப்படுகின்றது. ஜெயலலிதா இலங்கைத் தமிழர்
விடயத்தில் சிவில் யுத்தத்திற்கு முன்னராகவும், பின்னராகவும் எடுத்த நடவடிக்கைகள், இதன் மூலமாக அவர் அடைந்த
வெற்றிகள், அதனது பிரதிபலிப்புக்கள,; தமிழகத்தின் பிற முதலமைச்சர்கள் இவ்விடயமாக மேற்கொண்ட
நடவடிக்கைகள் போன்றவற்றினை வெளிப்படுத்துவதனை முதன்மையான நோக்கங்களாக இவ்வாய்வானது கொண்டு
காணப்படுவதுடன் ஆவணப்படுத்தல் என்பதனையும் இது துணை நோக்கமாக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆய்வில்
நேரடி அவதானிப்புக்கள், வினாக்கொத்துக்கள், சமகாலப் பத்திரிகைகள், போன்றன முதற்தர ஆதாரங்களாகவும்
பின்னாளில் தமிழகத்திலும் இலங்கையிலும் வெளிவந்த பத்திரிகைகள், இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள்,
நூல்கள், கட்டுரைகள் என்பன இரண்டாம்தர ஆதாரங்களாகவும் பயன்படத்தப்பட்டுள்ளன. இவற்றினை அடிப்படையாகக்
கொண்டு பார்க்கையில் இலங்கைத்தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா எப்போதும் சிவில் யுத்தத்திற்கு
முன்னராகவும் சரி அதற்கு பின்னராகவும் சரி உறுதியான கொள்கையினை உடையவராக இருக்கவில்லை என்பதே உண்மை.
அவரது கொள்கையானது பெருமளவிற்கு மத்திய அரசினையும் தமிழக மக்களையும் அவ்வப்போது திருப்திபடுத்துகின்ற
வகையிலேதான் அமைந்திருந்தன