dc.description.abstract |
தமிழக அரசியலில் இரு வேறு துருவங்களாக காலஞ்சென்ற தமிழக முதல்வர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும்
பார்க்கப்படுகின்றனர். அவர்கள் இரு வேறுபட்ட கட்சியினைச் சார்ந்தவர்கள் மட்டுமன்றி அரசியலிலும் மக்களது
செல்வாக்கிலும் சமபலம் பெற்றவர்களாகத் தமிழகத்தில் காணப்பட்டனர். எம்.ஜி.ஆரின் மரணத்தின் பின்னராக
இவர்கள் இருவரையுமே தமிழக மக்கள் முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தனர். அவ்வகையில் இவர்கள் இருவரது
கட்சி அரசியலில் பிரதான இடத்தினை பெற்ற ஒரு பிரச்சினையே இலங்கைத் தமிழர் பற்றிய பிரச்சினையாகும்.
அதற்கான பிரதான காரணங்களிலொன்று இருவரதும் காலத்திலேதான் மேற்குறிப்பிட்ட பிரச்சினையானது வேகம்
பெற ஆரம்பித்தது. அவ்வகையில் குறித்த பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டவர்களாக இவர்களைக் கருதலாம்.
இவ்விருவரதும் தலையீட்டின் பின்னணியில் அனுதாபம் என்பதற்கும் மேலாக அரசியல் சார்ந்த பிராந்தியக்
காரணிகள் பிரதான இடத்தினைப் பெற்றிருந்தன. தமிழகத்தில் சட்டசபைக்கான தேர்தல்கள் சூடுபிடிக்க ஆரம்பித்ததும்
தணிந்து போயிருந்த இலங்கைத் தமிழர் பிரச்சினையினை இவ்விருவரும் கையிலெடுத்து அதனைப் பிரதான
ஆயுதங்களிலொன்றாகப் பயன்படுத்தி ஒருவர் மீது மற்றொருவர் குறை கூற ஆரம்பித்து விடுவர். கருணாநிதி
இரண்டு தடவைகள் சட்டசபைக்கான தேர்தல்களில் தோற்கடிக்கப்படவும் ஜெயலலிதா அத்தேர்தல்களில் வெற்றியினைப்
பெறவும் இலங்கைத் தமிழர் பிரச்சினை பின்னணியில் பெருமளவிற்கு நின்றதென்பதில் இரு வேறுபட்ட
கருத்துக்கள் இல்லை. அவ்வகையில் இவ்விருவரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையினை முன்வைத்தே அரசியல்
செய்தனரென்பதே உண்மை. இருப்பினும் இலங்கைத் தமிழர் பிரச்சினையினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்
கருணாநிதி என்பதனையும் பலன் பெற்றவர் ஜெயலலிதா என்பதனையும் உணர முடியும். வரலாற்று
அணுகுமுறையினடிப்படையில் அமைந்த பண்பு ரீதியான பகுப்பாய்வு, விபரிப்பு, ஒப்பியல் ஆய்வாக
இவ்வாய்வானது அமையப்பெற்றுள்ளது. இதன் பொருட்டுத் தேவையான தகவல்கள் சமகாலப் பத்திரிகைகள், நூல்கள்,
ஆய்வுக்கட்டுரைகள், இணையம், நேர்காணல்கள், அவதானிப்புக்கள் உள்ளிட்ட முதல்நிலை மற்றும் இரண்டாம்நிலைத்
தரவுகள் மூலமாகப் பெறப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இரு தலைவர்களும் மேற்கொண்ட
அணுகுமுறைகள் அவற்றினால் உண்டான விளைவுகள், அவை செல்வாக்கினைச் செலுத்தியமுறை, இருவரதும்
அணுகுமுறைகளுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை அடையாளப்படுத்துவது என்பன ஆய்வினது பிரதான
நோக்கங்களாக உள்ளன. இத்தகைய ஆய்வின் மூலமாக இலங்கையின் இனப்பிரச்சினையில் இருவரது வகிபாகங்களும்
வெளிக்கொணரப்படுகின்றன. |
en_US |