Abstract:
இன்றைய சூழலில் மேற்குலக முதலாளித்துவ சக்தியென்பது சர்வதேசங்களது அரசியல் தலைவிதியினை
மாற்றியமைக்கின்ற அதிலும் குறிப்பாகக் கீழைத்தேயங்களது அரசியலில் செல்வாக்கினைச் செலுத்தி வருகின்ற
பாரிய சக்தியாக உருமாறியுள்ளது. ஆபிரிக்க, ஆசிய நாடுகளில் தமது அரசியல் பொருளாதார நலன்களை
நோக்கமாகக்கொண்டு மேற்குலக முதலாளித்துவ நாடுகள் அந்நாடுகளை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவே
பலவீனப்படுத்தி அந்நாடுகளில் தமது செல்வாக்கினை செலுத்திவருகின்ற இத்தகையதொரு பின்னணியிலேதான்
ஆபிரிக்க நாடுகளிலொன்றான சிம்பாவேயினது உள்விவகாரங்களில் நீண்டகாலமாக மேற்குலகம் தலையிட்டுவந்த
நிலையில் அவற்றினது ஆதரவுடன் அங்கு ஆட்சிக் கவிழ்ப்பொன்று அந்நாட்டினது இராணுவத்தினால் சென்ற
ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட்டு அதனது ஆட்சியாளரும் மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய ஆட்சி மாற்றத்தினை பிரித்தானியா உள்ளிட்ட பல முதலாளித்துவ நாடுகள் கொண்டாடின. இதன் மூலமாக
ஜனநாயகத்திற்கான அத்திவாரமொன்று சிம்பாவேயில் ஏற்படுத்தப்பட்டதாக அவை கருதின. அதுவரை காலமும்
சிம்பாவேயின் ஆட்சியாளர்களாக இருந்த றொபேர்ட் முகாபேயிற்கும் அவரது குடும்பத்திற்கு எதிராகவும்
மக்கள் தெருக்களில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டதனால் முகாபேயினது அரசு பல்வேறு பிரச்சினைகளுக்கு
முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் சிம்பாவேயின் பிரதான இராணுவத்தளபதி ஜெனரல் சிவெங்கா
தலைமையில் ஹராரேயினை இராணுவம் முற்றுகையிட்டது. தொடர்ந்து பாராளுமன்றம் உள்ளிட்ட எல்லா அரசாங்க
அலுவலகங்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் இராணுவம் கொண்டு வந்தது. முகாபேயும் அவரது குடும்பத்தவர்களும்
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இறுதியில் முகாபே தனது பதவியினை
இராஜினாமாச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். கட்சியின் தலைமைப்பதவியிலிருந்தும் அவர்
அகற்றப்பட்டார். புதிய ஜனாதிபதியாக எமர்சன் நாங்வா நியமிக்கப்பட்டார். ஆய்வில் முதற்தர மற்றும்
இரண்டாந்தரத் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வானது சமகாலத்தேய விடயத்தினை கொண்டிருப்பதனால்
பெருமளவிற்குப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள், அவதானிப்புக்கள்,
நேர்காணல்கள், வினாக்கொத்துக்கள் என்பனவற்றின் மூலமாக ஆய்விற்குத் தேவைப்பட்ட தரவுகள்
பெறப்பட்டுள்ளன. மேற்குலக முதலாளித்துவம் சிம்பாவேயினது ஆட்சிக் கவிழ்ப்பில் காட்டிய அதீத அக்கறையே
ஆய்வினது முக்கிய பிரச்சினையாக உள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணி, ஆட்சிக் கவிழ்ப்பின்
பின்னணியில் மேற்குலக முதலாளித்துவத்தின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்திருந்தன, தற்போதைய
சிம்பாவேயினது நிலை போன்ற விடயங்களை வெளிக்கொணர்வது ஆய்வினது பிரதான நோக்கங்களாகக்
காணப்படுகின்றன.