Abstract:
அண்மைக் காலங்களாக ஆசிய நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து
விடப்பட்டிருக்கும் இனவாதத்தின் பின்னணியில் உருவான அடக்குமுறைகளின் உச்சவெளிப்பாடுகளில் ஒன்றுதான்
மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இனச்சுத்திகரிப்பு
என்கின்ற நிகழ்வாகும். பௌத்த பேரினவாத நாடுகளில் மியன்மாரும் ஒன்று. அங்கு சிறுபான்மையினராக
ரோஹிங்ய முஸ்லிம்கள் வாழ்கின்றனர். கடந்த பல வருடங்களாக ரோஹிங்யர்கள் அங்கே வதைக்கப்படுகின்றனர்
என்ற குரல் சர்வதேசம் எங்கும் ஓங்கி ஒலித்தக் கொண்டிருக்கின்றன. ரோஹிங்யர்கள் மியன்மாரின் வடக்குப்
பகுதியான ராகைன் மாகாணத்தில் வாழ்கின்றனர். 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ரோஹிங்ய முஸ்லிம்கள்
தமது வரலாற்றினை அடையாளப்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். இதுவே ரோஹிங்ய முஸ்லிம்களுக்கும்
மியன்மார் அரசிற்கும் இடையிலான பிரிவினைக்குத் தூபமிட்டிருந்ததெனலாம். தொடர்ந்து ரோஹிங்யர்களது
பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. ரோஹிங்ய இனத்தவர்கள் பங்காளி இனத்தவர்கள் எனவும் அவர்கள் மியன்மார்
இனத்தவர்கள் அல்லர் என்ற கருத்தும் 1956இலிருந்து மியன்மாரில் பரவத் தொடங்கியது. இதன் விளைவாகவே
மியன்மார் நாடு பூராகவும் முஸ்லிம் மக்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. இதனடிப்படையில்
மியன்மார் அரசு ரோஹிங்யர்கள் இடையில் வந்தவர்கள் எனவும் சட்டவிரோதக் குடிகளெனவும் குறிப்பிட்டு
அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் எல்லாவற்றினையும் தடுத்து வருகின்றது. இதனால்
ரோஹிங்யர்களின் விடுதலைக்கான ஆயுதக்குழு ஒன்றும் அங்கு செயற்படத் தொடங்கியது. இந்த ஆயுதக்குழு
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நடத்திய தாக்குதலை அடுத்து 10 சிப்பாய்கள் உயிரிழந்தனர். இதை
அடுத்து மியன்மார் அரசானது ரோஹிங்யர்களுக்கு எதிரான வன்முறையை பெருமெடுப்பில் மேற்கொண்டது. இதனை
அடுத்து ஏராளமான ரோஹிங்யர்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக அயல்நாடுகள் நோக்கி நகர
ஆரம்பித்தனர். இம்மக்களுக்கெதிராக மியன்மார் அரசு கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு, கிராமங்களை
அழித்தல், அரச மற்றும் தனியார் வேலைகளை வழங்காமை, காரணமின்றிச் சிறையில் அடைத்தல் என
அனைத்துவிதமான மனித உரிமை மீறல்களையும் நடைமுறைப்படுத்தியது. சர்வதேசம் இதனை பெரிதளவில்
கண்டுகொள்ளவில்லை. ஐ.நா. சபை தற்காலத்தில் இவ்விடயமாகக் கவனம் செலுத்தியபோதும் அதனால் ரோஹிங்யர்களுக்கு
ஒரு தீர்வினை முழுமையாக அதனால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. முழுக்க முழுக்க வரலாற்று அணுகுமுறையின்
அடிப்படையில் விமர்சன நோக்கில் அமையப்பெற்ற இவ்வாய்வின் மூலமாகப் பல நோக்கங்கள் நிறைவு
செய்யப்படுகின்றன. ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிராக மியன்மார் அரசு மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பு
நடவடிக்கைகளை இனங்காண்பதும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டினை
வெளிக்கொணர்வதும் இறுதியாக அவர்களது தற்கால நிலை எதுவென்பதனை வெளிப்படுத்துவதனையும் பிரதான
நோக்கங்களாக இவ்வாய்வானது கொண்டுள்ளது. இவ்வாய்வில் முதற்தர மற்றும் இரண்டாம்தரத் தரவுகள் ஆய்வின் தேவை
கருதிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்களால் சமகாலத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் முதற்தர
ஆதாரங்களாகவும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், கட்டுரைகள், இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் என்பன இரண்டாம்
தரத் தரவுகளாகவும் ஆய்வில் பயன்படத்தப்பட்டுள்ளன. பொதுப்படப் பார்த்தால் மியன்மார் நாட்டில் பல்லின
அரசொன்று அமையுமிடத்திலேதான் அங்கு ஜனநாயகத்தினை ஓரளவுக்கு எதிர்பார்க்க முடியும்