Abstract:
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டசபைக்கான தேர்தலானது பல்வேறு சர்ச்சைகளை
ஏற்படுத்தியிருந்ததுடன் பல்வேறு கருத்துக்கணிப்புக்களையும் பொய்யாக்கி எதிர்பாராத விளைவுகளையும்
ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இத்தேர்தல் முடிவானது திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் அதனது கூட்டணிக்
கட்சிகளதும் தோல்வியினைப் பறைசாற்றிய முடிவாகக் காணப்பட்டது. அதாவது பொதுவாகப் பலரதும்
எதிர்பார்ப்பாகவும் கருத்துக்கணிப்பாளர்களது கணிப்பாகவும் எதிர்பார்க்கப்பட்டது யாதெனில் நடந்து முடிந்த
சட்டசபைக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும், அதனது கூட்டணிக் கட்சிகளும் இணைந்து குறைந்தது 130
இற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று ஆட்சியினை அமைக்கும் என்பதே (தினமலர், 2016,மே 08). இத்தகைய
கருத்துக் கணிப்புக்களை தமிழகத்திலிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள் மட்டுமன்றி டெல்கியிருந்து
வெளிவருகின்ற பத்திரிகைகள் மற்றும் இந்தியப்பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் எனவும் பல அமைப்புக்கள்
மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு மாறாக அக்கட்சியும் அதனைச் சேர்ந்த கூட்டணிக்
கட்சிகளும் இணைந்து 98 ஆசனங்களையே பெற்றுக் கொண்டன. 5 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற தமிழகச்
சட்டசபைக்கான இத்தேர்தலில் பிரதானமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் , திராவிட முன்னேற்றக்
கழகத்திற்கும் இடையிலேதான் நேரடியான போட்டி காணப்படும். அவ்வாறே இம்முறையும் இத்தேர்தலில் ஏற்பட்ட
நேரடியான பலப்பரீட்சையில் திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பாராதவகையில் தோல்வியினைச் சந்தித்தது.
இத்தகைய தோல்விக்குப் பல காரணங்கள் ஆய்வாளர்களினால் முன்வைக்கப்படுகின்றன. வெற்றிக் கனியானது திராவிட
முன்னேற்றக் கழகத்தினது பக்கமே தேர்தல் காலத்திற்கு ஒரு சில நாட்கள் வரை இருந்ததென்பதனை மறுப்பதற்கில்லை.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பல கட்சியிலிருந்தவர்களும் அக்குறிப்பிடப்பட்ட
கட்சிகளிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர். கருணாநிதியினது
குடும்பத்தவர்களது பிரச்சாரமானது அனல் பறக்கும் வகையில் அமைந்திருந்தது. நல்ல பல திட்டங்களையும் தேர்தல்
அறிக்கையாகத் திராவிட முன்னேற்றக் கழகமானது தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வெளியிட்டிருந்தது.
அதுமட்டுமன்றி அதிகளவான கருத்துக்கணிப்புக்களும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சார்பான வகையிலே
தான் அமைந்தும் இருந்தது. இருப்பினும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஐந்து முனைப் போட்டியிலமைந்த இத்தேர்தலில்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே வெற்றியினைப் பெற்றிருந்தது. 1984 இன் பின்னராக அதுவரை
ஏற்பட்டிருக்காத ஒரு மாற்றத்தினை இத்தேர்தல் தமிழக வரலாற்றில் ஏற்படுத்தியிருந்தது (தினமணி,2016 மே
17). இதற்கு முக்கியமான காரணிகளிலொன்றாகச் சொல்லப்படுவது இறுதி நேர அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தினது தேர்தல் வெற்றிக்கான காய் நகர்த்தலே என்பதாகும். அதாவது சிறப்பாக அக்கட்சியினால் தேர்தலுக்கு
ஏறத்தாள இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையே என்பது குறிப்பிடத்தக்கது.