Abstract:
யாழ்ப்பாண சமூகக் கட்டமைப்பில் சின்னமேளம் எனப்படுகின்ற தேவதாசிகளது நடனமென்பது ஏறத்தாழ 20 ஆம்
நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அப்பகுதிகளில் செல்வாக்குப் பெற்றதொரு நடனமாகவே இருந்து வந்தது. சோழரது
ஆட்சிக்காலத்தின் பின்னரான இலங்கையில் தோற்றம் பெற்ற தேவதாசிகள் எனப்படுவர்களது இத்தகைய நடனமானது
18,19 ஆம் நூற்றாண்டுகளில் மட்டுமன்றி 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கூட யாழ்பாணத்திலுள்ள
பெரும்பாலான சைவ ஆலயங்களில் நடைபெற்ற ஒரு நடனவகையாக காணப்பட்டது. அதாவது அக்காலப்பகுதியில்
யாழ்ப்பாணத்தின் பிரபல்யமாக விளங்கிய சைவ ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்ற சமயங்களில்
இவர்களது நடனமானது திருவிழாக்களில் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய இவர்களது நடனத்தினை
அக்காலத்தில் சின்னமேளம் என்ற யெயரில் பொதுவாக அழைப்பார். அவ்வகையில் யாழ்ப்பாண சைவ மக்களது
பண்பாட்டில் பிரிக்கமுடியாத அம்சமாக இவர்களது நடனமானது காணப்பட்டிருந்தது (ஈழகேசரி,1936 ஐனவரி 07)
மக்கள் பெருமளவில் கூடுகின்ற இடமாக ஆலயங்கள் காணப்படுவதுடன் பக்திப்பாடல்கள் பாடப்பட்டுப் பலவிதமான
விழாக்கள் கொண்டாடப்படும் இடமாகவும் அது காணப்பட்டது. ஆரம்பகாலங்களில் தமிழ் சமஸ்கிருத சங்கமத்தில்
தோன்றி வளர்ந்த நுண்கலை சிற்பக்கக்கலை போன்றன ஆலயங்கங்களை மையமாகக் கொண்டே வளர்க்கப்பட்டன. ஆலயத்
தொடர்பு என்ற அம்சமானது நுண்கலையோடு தொடர்புடைய ஆலயங்களுக்குத் தம்மை அர்ப்பணித்த தேவாசிகளுடன்
சம்மந்தப்பட்டதாகவும் சோழவரலாற்றில் அரசியல் கலாசாரக் குறியீட்டாகவும் காலக்கிரமத்தில்
வளர்ச்சிக்கண்டது. (சிவகாமி, வி., 2005) எனவே எல்லோராலும் வெறுக்கப்பட்ட, சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட
தாசியொருத்தி கலைத்தொழிலாக கொண்டு ஆலயத்திற்கு நுழைவதனை குறிக்கும் பதம் தேவதாசிக்கு பொருந்தாத
பதமாகும். இது இவ்வாறிருக்க இந்நடனத்திற்கு எதிராக இத்தகைய நிகழ்வுகள் ஆலயத்திற்குள் நடைபெறுவது
தவிர்க்கப்படுதல் வேண்டுமெனவும் இது தமிழ் மக்களது கலாசாரத்திற்கு ஊறினை விளைப்பதாகவும் அவ்வப்போது
யாழ்ப்பாண சமூகத்திலிருந்த சில முற்போக்கான சிந்தனை உள்ளவர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு
வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறெனினும் பொழுதுபோக்கு சாதனங்களது அதீத வளர்ச்சியின்
பின்னனியில் இந்நடனமானது படிப்படியாக செல்வாக்கினை இழந்து வந்து தற்காலத்தில் இருந்த இடம் தெரியாமல்
மறைந்துவிட்டதெனலாம்.