Abstract:
சமூகஉளவியலாளர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற சமூக உளவியல் கருத்துக் கோட்பாடுகளுள் இன்பநலக் கோட்பாடென்பது ஒன்றாகும். இக்கொள்கைபலவகைப் படிநிலைகளூடாகமலர்ச்சிகண்டுபயன் முதற்கொள்கை என வளம் பெற்று நின்றது. இன்பம் தான் வாழ்வின் குறிக்கோள் என்ற சிந்தனையை வலியுறுத்தும் கொள்கை இதுவாகும். மிகப் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அளவிலாத இன்பம் தரும் செயலைச் செய்தலே அறவியற் குறிக்கோளாகுமென இக்கோட்பாட்டாளர்கள் விளக்கினர். இன்பம் தான் வாழ்வின் குறிக்கோள் என நவீன சமூக உளவியலாளர்கள் எடுத்தாளும் நிலையில், இந்துக்களின் அறஇயற்கொள்கையானது அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு உறுதிப்பொருட்களை குறிக்கோளாக விளக்கி நிற்கின்றது. பொருள், இன்பம் முதலியன அறத்தை நாடவும், அறம் வீட்டின்பத்தை அளிக்கவும் பயன்படுவன. இக் குறிக்கோள்களை நோக்கியதான செயற்கரும் செயல்களே அறக்கடமைகளாக எடுத்தாளப்படுகின்றன. பௌதீக அதீத எல்லையைக் கடந்து அப்பாலாயுள்ள இறைவனையும், அவ்விறைவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களையும் முன்னிறுத்தி காலந்தோறும் இந்துசமயப் புலத்தில் அக்கடமைகள் பிரசாரிக்கப்பட்டு வந்தன. அறவாழ்வின் மூலம் பெறும் இன்பம் பேரின்பத்திற்கு இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கை மக்கள் மயப்பட்டிருந்தது. பக்தி என்னும் சாதனத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்ட பல்லவர் காலத்து சமூக இயக்கச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான நாவுக்கரசர் சைவசமூகக்கட்டமைப்பினை உருவாக்குவதற்கு எத்தனம் செய்தவர். இவ் எத்தணிப்புகளுக்கான சிந்தனைகளை அவரது படைப்புக்களான தேவாரங்களில் இனங்காணலாம். சமய, தத்துவக் கருத்துக்களை மட்டுமன்றி அறிவியற் சிந்தனைகளையும் தேவாரப் பதிகங்கள் பொருண்மையாகக் கொண்டுள்ளன. இந்திய மெய்யியல் பரப்புடன் இணைந்ததாகவே உளவியலும் காலந்தோறும் வளம் பெற்று வந்தது. இந்திய உளவியலில் தனிமனிதனை மையமாகக் கொண்ட கருத்தியல் சிந்தனைகள் காணப்படினும், பொதுவான நோக்கம் இருப்பதனையும், சுயவிழிப்புணர்வை மையப்படுத்தியதாக இச்சிந்தனைகள் உருவாக்கப்பட்டதனையும் காணவியலும். அதேவேளை சில பொதுவான கொள்கைகள் வாழ்க்கையை உரியமுறையில் வாழ்ந்து மகிழ்ச்சியைத் தேடிக்கண்டறிய உருவாக்கப்பட்டதுடன் இந்திய உளவியல் ஒவ்வொன்றும் தனித்தன்மையதாகவும் உள்ளது. அதன் உண்மையான நோக்கம் 'மனம்' என்பதைப் பற்றி ஆராய்வது மட்டுமல்ல. அதனை விருத்தி செய்து நடத்தை (Behavior) மற்றும் ஆளுமையோடு (Personality) இணைப்பதுமாகும். இம் மனம் பற்றிய கருத்தியல்களின் நகர்வுக்கும், நடத்தைக்கோலங்களின் விருத்திக்கும் முறையான வாழ்வியலூடான இன்பத்திற்கும் நாவுக்கரசரின் சிந்தனைகள் ஆக்கபூர்வமானவையாக உள்ளன. ஆன்மிக இன்பம்சார் சிந்தனைகளை இனங்கண்டு நோக்குவதே இவ்வாய்வின் பிரதான இலக்காகும். சமயம் சார் அடிப்படையிலும், சமூக உளவியல் அடிப்படையிலும் இந்த ஆய்வு நிகழ்த்தப்படுவதனால் இலக்கிய விபரண ஆய்வு முறையியலையும், ஆய்வினது இலகுத்தன்மைக்காக உள்ளடக்க பகுப்பாய்வு முறையியலையும் பின்பற்றிச் செல்கிறது. திருநாவுக்கரசரின் தேவாரங்களை ஆய்வுப்பகுதியாகவும், அந்நூலிலுள்ள இன்பவியற் சிந்தனைகளை வரையறையாகவும் கொண்டு இவ்வாய்வு நிகழ்த்தப்படுகிறது.