Abstract:
சிவபூமி என திருமூல நாயனாரால் சிறப்பிக்கப்பட்ட இலங்கையிலே இந்தியச் சமயங்களின் நேரடிச் செல்வாக்கினையும் செழுமையினையும் உணர முடிகின்றது. இலங்கையின் தலைப்பகுதியாகவும், பண்பாட்டு பாரம்பரியங்களைக் கொண்டு விளங்கும் சிறப்பான பகுதியாகவும் யாழ்ப்பாணப் பிரதேசம் திகழ்கின்றது. யாழ்ப்பாணத்து மக்கள் தமக்கேயுரியதான உயர் பண்பாட்டு நாகரிகமிக்க சமூகக் குழுமத்தினராக இருந்து வருகின்றனர்.இத்தகைய குழுமத்தினரில் 86 சதவீதமானோர் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். சைவமும் தமிழும் இம்மக்களின் உணர்வோடும் உள்ளத்தோடும் தொடர்புற்றிருக்கின்றது.அது மட்டுமல்லாமல் இவர்கள் இவ்விரண்டையும் தமது அன்றாட அடிப்படைகளாகப் போற்றி, புலமைத்துவத்துடன் அவற்றை வளர்க்கும் ஆளுமை படைத்தவர்களாகவும் விளங்கி வந்துள்ளனர். ஆனால் நாட்டிலே ஏற்பட்ட அசாதாரணமான சூழலமைவுகளும், அதனால் நிகழ்ந்த தொடர்ச்சியான இடம்பெயர்வுகளும், சமூகத்தில் குறிப்பாக அனுஷ்டான முறைமைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன. நாகரிக மாற்றம், மதமாற்றம் கலப்புத் திருமணங்கள், நவீன இலத்திரனியல் சாதனங்களின் ஆக்கிரமிப்பு, பொருள்முதல்வாத சிந்தனைகளால் சமயத்தின் மீதுள்ள நம்பிக்கை அற்றுப்போதல், நவீன முறைக்கல்வி போன்ற பின்புலங்களினால் பண்பாட்டு விழுமியங்களைக் கடைப்பிப்பதில் இடர்பாடுகள் எழுந்துள்ளன. இத்தகைய இடர்பாடுகள் இந்து சமயம் சார்ந்த அனுட்டானங்களைக் கடைப்பிடிப்பதில் பாரிய இடைவெளிகளைத் தோற்றுவித்துள்ளன. யாழ்ப்பாணத்துச் சைவப் பண்பாட்டின் சிறப்பானது அனுட்டான முறைமைகளின் ஊடாகவும் தனித்துவமடைந்து காணப்பட்டது என்பதனை தெரியப்படுத்தி அதன் இன்றைய நிலையினை வெளிக்கொண்டுவருதல் என்பது இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். மேலும், தனிமனிதன் தான் சார்ந்த நிலையில் கடைப்பிடித்தொழுகும் அனுட்டானங்களின் முக்கியத்துவத்தினையும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள சவால்களையும் இனங்கண்டு வெளிக்கொண்டு வருவதும், அவற்றின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதனூடாக மக்களின் மேம்பட்ட வாழ்வுக்கு முன்மொழிவுகளை எடுத்துரைப்பதும் இவ்வாய்வின் நோக்கங்களாக அமைகின்றன. பத்திரிகைகள், நேர்காணல்கள், பெரியோர் உரையாடல்கள், சொற்பொழிவுகள், நேரடி அவதானிப்புகள் என்பன அனுட்டானங்களின் சமகால நிலையினை அறிவதற்கான மூலங்களாக உள்ளன. இவ்வாய்வானது ஆய்வுப் பிரதேசமாக யாழ்ப்பாணத்தைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் என்பது வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் மற்றும் தீவகம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும். வரலாற்று ஆய்வுமுறை, விபரண ஆய்வுமுறை ஒப்பீட்டு ஆய்வு முறை, கள ஆய்வு முறை முதலிய முறையியலின் அடிப்படையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. தனிமனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை கடைப்பிடித்துச் செல்லும் சமய அனுஷ்டானம் சார்ந்த நெறிமுறைகளே இவ்வாய்வின் எல்லையாகும்.