Abstract:
பண்பாட்டின் இன்றியமையாத பகுதியாக சமுதாய மதிப்புகள் உள்ளன. சமுதாய மதிப்பு என்பது அருவப்பண்பாட்டுக் கூறுகளில் ஓரங்கமாகும். இவை குறித்த கருத்தியல் சிந்தனைகளை சமூகவியலாளர்களும் மானிடவியலாளர்களும் வழங்கியுள்ளனர். குடும்பம், திருமணம், அரசு பொருளாதாரம், கல்வி மற்றும் சமயம் போன்ற சமூக நிறுவனங்களூடாக சமுதாய மதிப்புகளானவை செல்வாக்குச் செலுத்துவதுடன் அவற்றின் இருப்பையும் தனித்தன்மைகளையும் தீர்மானிப்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன. பல்லவர் காலத்தில் சைவ சமயத்தவர் மத்தியில் பேராதரவு பெற்றிருந்த பக்தி இயக்கத்தின் தலைமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த திருநாவுக்கரசு நாயனார் சமுதாய மதிப்புக்களை தமது பதிகங்களிலே அழுத்தியிருப்பதனூடாக சமூக நெறிஞர் என்ற பெறுமானத்தையும் உடையவராகின்றார். இறைபெருமை பேசுவதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் இவரது தேவாரங்கள் எவ்வாறு சமுதாய மதிப்புகளை வலியுறுத்துகின்றனஎன்பதனை சமூகவியல் மற்றும் சமயத் தளத்தில் நின்று இவ்வாய்வு நிகழ்த்தப் பெறுகின்றது.