Abstract:
ஆதியில் தோன்றிய மனிதனுக்கு இறைபக்தி தொடர்பான அறிவு எதுவும் இருக்கவில்லை. அச்சமயத்தில் அது பற்றி அலைந்து திரிந்த அத்தகைய மக்கள் கூட்டத்திற்கு சிந்திப்பதற்கான தேவையோ அல்லது அதற்கான நேரமோ இருக்கவில்லை. காலப்போக்கில் இயற்கையிலிருந்தும் கொடிய விலங்குகளிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இயற்கையை வழிபட ஆரம்பித்த அவர்களது நடவடிக்கைகள் படிப்படியாக சமயங்களின் வளர்ச்சியாக முதிர்வு நிலையினை அடைந்தது. மேலும் பின்னாளில் தாம் வழிபட ஆரம்பித்த தெய்வங்களுக்காக நிலையான இடத்தினை அமைத்துக்கொள்ள முற்பட்ட அவர்களது முயற்சியினால் அவை சமய நிறுவனங்களாக அதீத வளர்ச்சியினை அடைந்தன. இது உலகில் தற்காலத்தில் பரந்துபட்டு காணப்படுகின்ற பெரும்பாலான மதங்களுக்கு காணப்படுகின்ற பொதுவான இயல்பாகவே இருக்கின்றது. இத்தகைய இயல்பானது ஈழத்திலும் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சைவசமயத்திற்கு விதிவிலக்காக அமையவில்லை. அந்தவகையில் சைவ மக்களால் அவர்களது வழிபாட்டிற்கென அமைக்கப்பட்ட சைவாலயங்கள் பல மக்கள் மத்தியில் இறையுணர்வினை அதிகரித்த நேரத்தில் ஐரோப்பியர்களின் வருகையின் பின்னரான காலப்பகுதியில் அவற்றினது நடவடிக்கைகள் குறைபாடுகள் பலவற்றினைக் கொண்டிருந்தன. பொதுப்படப் பார்த்தால் ஈழத்தில் சைவாலயங்களது எண்ணிக்கையானது 19ஆம் நூற்றாண்டின் பின்னரான காலப்பகுதியில் ஆங்கிலேயர்களினால் மதச் சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னரே அதிகரித்தது எனலாம். எனவே இத்தகைய சைவாலயங்களில் காணப்பட்ட குறைபாடுகளை அகற்றுகின்ற நோக்குடன் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் சில முற்போக்குவாதிகளும் முற்போக்கான கொள்கைகளைக் கொண்ட நிறுவனங்கள் சிலவும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் தம்மாலான முயற்சிகளை முன்னெடுத்தனர். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் நா.பொன்னையாவும் அவரால் வெளியிடப்பட்ட ஈழகேசரி என்ற பெயரினையுடைய யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த தமிழ்ப் பத்திரிகையினது நடவடிக்கைகளும் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் அமைந்திருந்தன. இத்தகைய பத்திரிகையின் வாயிலாக சைவாலயங்கள் பலவற்றின் நடவடிக்கைகள் கண்டனம் செய்யப்பட்டன. இதனது நடவடிக்கைகள் சமகாலத்தில் மக்கள் பலரை சிந்திக்க வைத்தது. சமகாலத்தில் சைவாலயங்களில் காணப்பட்ட இத்தகைய குறைபாடுகள் பற்றிய ஆய்வு முயற்சியில் பல்வேறு அறிஞர்கள் ஈடுபட்டிருந்தாலும் கூட இவ்வாய்வானது வரலாற்று அணுகுமுறையின் பின்னணியில் அளவுசார், பண்புசார் அடிப்படையில் செல்கின்றது. ஆய்வில் முதல் தர ஆதாரமாக ஆய்வுடன் பெருமளவுக்குத் தொடர்பான சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழகேசரியே பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இதேகாலப்பகுதியில் வெளிவந்து கொண்டிருந்த இந்துசாதனம், வீரகேசரியும் கூட முதல்தர ஆதாரங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாந்தர தரவுகளில் சமகாலத்தில் வெளிவந்து கொண்டடிருந்த இந்துசாதனம் போன்ற சில தமிழ் பத்திரிகைகளும் பிற்பட்ட காலங்களில் முதற்தர தரவுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஈழகேசரி வெளிவந்த சமகாலத்தில் (1930-1958) சைவாலயங்களில் காணப்பட்ட சில குறைபாடுகளை ஈழகேசரி துணிந்து வெளியிட்டதன் பின்னணியில் சைவ மக்கள் மத்தியில் குறிக்கப்பட்ட ஒரு சில விடங்களில் மாற்றங்கள் படிப்படியாக ஏற்பட்டு வந்தமையினை கிடைத்துள்ள ஆதாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. உண்மையில் முற்றாக மக்களது மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது விட்டாலும் கூட அக்காலப்பகுதியில் சைவ மக்களின் மனங்களில் முற்போக்கான மாற்றங்களை ஏற்படுத்துவதில் இதனது பங்களிப்பானது குறிப்பிடத்தக்க செல்வாக்கினை ஏற்படுத்தியிருந்தமை அவதானிக்கத்தக்கது.