dc.description.abstract |
வட இலங்கையினது பொருளாதாரத்தில் அதனது பிரதான வருமான மூலங்களிலொன்றாக புராதன காலந் தொடக்கம் பனை மரமும் அது சார்ந்த பண்டங்களும் அமைந்திருந்தன. அதாவது பெருங்கற்காலப் பண்பாட்டுக்கும் முன்னதாக ஆரம்பித்த யாழ்ப்பாண அரசர்களது காலத்திலும் தொடர்ந்து வந்த ஐரோப்பியர்களது காலங்களிலும் சுதந்திரத்தின் பின்னராகவும் பல்வேறு வழிகளில் வடஇலங்கையினது பொருளாதாரத்தில் இவை செல்வாக்கினைச் செலுத்தியிருந்தன. வடஇலங்கை மக்களுக்கு கற்பகத்தருவாக இருந்து அவர்களது பட்டினி வாழ்வினை அகற்றியது. நோயாளருக்கு மருந்தாகியது. யாழ்ப்பாணத்தரசர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் பிரதான வர்த்தகப் பொருட்களாக இருந்து வருவாயினைப் பெற்றுக்கொடுத்தது. பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கியது. உள்நாட்டில் மட்டுமன்றி அக்காலப்பகுதிகளில் அயல்நாடுகளிலும் இத்தகைய பொருட்களுக்கு பெரும் கிராக்கி இருந்தது. தற்காலங்களில் வடஇலங்கை மக்களிடையிலே பனை உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஆர்வங்குறைந்திருந்த போதும் வடஇலங்கையில் வாழுகின்ற மக்களில் சில குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தின் அடிப்படையாக இவற்றினைத் தற்போதும் நம்பியிருக்கின்றன. புராதன காலந்தொடக்கம் தற்போதுவரை பனையும் அது சார்ந்த பொருட்களும் வடஇலங்கையினது பொருளாதாரத்தில் பெற்றிருந்த சிறப்பினை ஆராய்வதும் அதனது மகத்துவத்தினை தற்காலத்தவருக்கு புரிய வைப்பதும் ஆய்வினது பிரதான நோக்கங்களாகும். பனையினது வகிபாகத்தினை வரலாற்று அணுகுமுறையினடிப்படையில் விரிவான முறையில் தனியாக எவரும் இதுவரை ஆராயவில்லையென்ற குறைபாடு உள்ளது. அதுமட்டுமன்றி இவ்விடயமாக வருங்காலங்களில் ஆய்வினை மேற்கொள்ள இருக்கின்ற ஆய்வாளர்கள் பலருக்கும் இவ்வாய்வானது முன்னோடியான ஆய்வாக அமையுமென்பது எனது நம்பிக்கை. முழுக்க முழுக்க வரலாற்று அணுகுமுறையினடிப்படையில் பண்புசார் ஆய்வாக அமைந்துள்ள இந்த ஆய்வில் முதற்தர மற்றம் இரண்டாந்தர ஆதாரங்கள் ஆய்வினது தேவை கருதி பயன்படுத்தப்பட்டுள்ளன. முதற்தர ஆதாரங்களில் ஐரோப்பியர்களது அறிக்கைகள், ஆவணங்கள், சமகாலத்தேய படைப்புக்கள் என்பன பிரதான இடத்தினைப் பெறுகின்றன. இரண்டாந்தர ஆதாரங்கள் வரிசையில் பிற்பட்ட காலங்களில் முதற்தர ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள், பத்திரிகைகள், இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள், நேர்காணல்கள் என்பன அடங்கியுள்ளன. இவற்றினை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது முடிவாக பனை மரமானது வட இலங்கையில் உருவாகியது தொடக்கம் தற்போதுவரை அப்பகுதிகளில் வசித்து வருகின்ற மக்களின் பொருளாதாரத்தில் செல்வாக்கினைச் செலுத்தி வருவதனை எவரும் மறுக்க முடியாது. பனை மரமென்ற வளமானது வடஇலங்கையில் இருந்திருக்காது விட்டிருந்தால் தற்போது அங்கு வாழ்ந்து வருகின்ற இனத்தினது வாழ்வே சிலவேளை வினாவிற்குரியதாக மாறியிருக்கும். |
en_US |