Abstract:
ஒரு நாட்டினுடைய அல்லது பிரதேசத்தினுடைய அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நிலப்பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் அவசியமாக உள்ளன. நிலப்பயன்பாடு என்பது'' ஒரு குறித்த நிலத்துடன் இணைந்த மனித செயற்பாடுகளை குறித்து நிற்கும் அதேநேரம் நிலப்போர்வையானது நிலமேற்பரப்பில் போர்த்தியிருக்கும் இயற்கை மற்றும் செயற்கைத் தோற்றப்பாடுகளைக்'' குறிக்கின்றது. ஆரம்ப காலத்தில் இருந்தே நிலப்பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகளும், அவற்றினை படமாக்கும் முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டே வந்துள்ளன. தற்காலத்தில் நிலப்பயன்பாடுகளை படமாக்குவதற்கு வளர்ச்சியடைந்த ஒரு தொழினுட்பமாக செய்மதி தொலையுணர்வுத் தொழினுட்பம் விளங்குகின்றது. இந்தவகையில் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் நிலப்பயன்பாட்டுப் பாங்கினை செய்மதி விம்பங்கள் மற்றும் பங்குபற்றுதலுடனான களவாய்வினை அடிப்படையாகக் கொண்டு கண்டறிதலே இவ் ஆய்வின் நோக்கமாக உள்ளது. செய்மதி விம்பங்கள் மற்றும் பங்குபற்றுதலுடனான களவாய்வுகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் புவியியல் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலப்பயன்பாட்டுப் பாங்குகளின் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கு காணப்படும் பொருத்தமற்ற நிலப்பயன்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது என்பதை ஆய்வின் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன. செய்மதி விம்பங்களில் காணப்படுகின்ற தெளிவில்லாத நிலப்பயன்பாட்டுப் பாங்குகளை பங்குபற்றுதலுடனான களவாய்வை மேற்கொண்டதன் மூலமே அறிய முடிந்துள்ளது. எதிர்காலத்தில் நிலப்பயன்பாடுகள் பொருத்தமாக இருப்பதற்கும், நிலப்பயன்பாடுகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் இவ்வாய்வு பயனுடையதாக அமையும். எனவே இவ் ஆய்வுக் கட்டுரையின் மூலம் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் நிலப்பயன்பாட்டு பாங்குகளை அறிய முடிந்துள்ளதுடன், நிலைத்துநிற்கும் நிலப்பயன்பாட்டுப் பாங்குகளை உருவாக்குவதற்கு மக்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஏற்றக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது என்ற விடயத்தையும் இவ்வாய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.