Abstract:
இலங்கையின் விவசாயத்தில் நெற்பயிர்ச்செய்கை முக்கியம் பெறுகின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலகர் பிரிவுகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டாலும் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவே ஆய்விற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேசமானது 194, 883 ஏக்கர் பரப்பினை கொண்டுள்ளது. இதில் 35,898.5 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்ப்பாசனத்தின் மூலமும், மழையை நம்பியும் வருடத்தில் இரண்டு பருவங்களில் 12,318 விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றார்கள். இங்குள்ள நெற்செய்கைப் பரப்புக்கள் யாவும் சிறியனவாக இருப்பதால் நவீனதொழில்நுட்பங்களை புகுத்துவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. அத்துடன் விவசாயிகளிடத்திலும் இது பற்றிய அறிவு குறைவாகவே இருப்பதால் இவற்றை பயன்படுத்துவதற்கு தயங்குகின்றனர். எனவே இங்குள்ள நெற்பயிர்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பமுறைகளை பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற சமூக, பொருளாதார, சூழலியல் தாக்கங்களை ஆராய்ந்து அதற்கான காரணங்களைக் கண்டறிந்து பொருத்தமாக தீர்வுகளை முன்வைப்பதுவே இவ்ஆய்வின் நோக்கங்களாக உள்ளன. ஆய்வுப்பிரதேசத்தில் 219 கிராமங்களை உள்ளடக்கிய 46 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன. இவற்றில் எல்லா கிராமங்களையும் உள்ளடக்கக்கூடிய வகையில் தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கு வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் நேரடி அவதானம், பேட்டிகாணல், கலந்துரையாடல் போன்ற முறைகள் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இவ்ஆய்விற்காக இரண்டாம் நிலைத்தரவுகளும் சேகரிக்கப்பட்டு, பெறப்பட்ட தரவுகளானது கணனி மூலம் குறிப்பாக Excel Package , சாதாரண புள்ளிவிபர நுட்பமுறைகள் மூலமும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்ஆய்வில் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளின்படி இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள சமூகத்தாக்கங்களாக வேலையில்லாப்பிரச்சினை, நவீன தொழில்நுட்ப சாதனங்கள் (இயந்திரங்கள்) பற்றிய கல்வி அறிவு குறைவாக உள்ளமையால் அதனை சரியான முறையில் பயன்படுத்த தெரியாமை, போக்குவரத்துப் பிரச்சினை சிறிய விவசாய நிலங்களாக காணப்பட்டமையால் இயந்திர சாதனங்களை பயன்படுத்த முடியாதநிலை போன்றவையும் பொருளாதாரத்தாக்கங்களாக மூலதனப்பற்றாக்குறை, வருமானம் குறைவு, உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமை, இடைத்தரகர்களின் தொல்லை போதிய சந்தைவாய்ப்பு இன்மை போன்றனவும் சூழல் தாக்கங்களாக அதிகளவான உரம், கிருமிநாசினி பயன்பாட்டால் நிலம் வளமிழந்துபோதல், மண்ணுக்கு நன்மை செய்யும் பூச்சி, புழுக்கள் இறந்துபோதல், நீர்தரமிழந்து போதல், வானிலைமாற்றம் (காலம், பிந்திய, முந்திய மழைவீழ்ச்சி) போன்றனவும் பாதகமான தாக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை வேலைகளை இலகுவாகவும், விரைவாகவும் செய்து முடிக்கக் கூடிய நிலை, நேரம் மீதி, குறுகிய காலத்தில் அதிகளாவான விளைச்சல் போன்ற சாதகமான தாக்கங்களும் இனங்காணப்பட்டுள்ளன. இதற்கான தீர்வுகளாக பாரம்பரிய நெற்செய்கை முறைகளை பின்பற்றுவதோடு காலத்தின் தேவைகருதி நவீன தொழில்நுட்பமுறைகளையும் பின்பற்ற வேண்டும். நவீன விதையினங்கள், உரங்கள், கிருமிநாசினிகள் போன்றவற்றை உரியமுறையில் சரியான அளவுகளில் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை கூறவேண்டும். அரசாங்கம் விவசாயிகளுக்கு கடனுதவிகளையும், மானியங்களையும், காப்புறுதித் திட்டங்களையும், அறிமுகப்படுத்த வேண்டும். இயந்திர மயமாக்கல் காரணமாக வேலை இழந்தவர்களுக்கு பொருத்தமான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதோடு சுய தொழில் வாய்ப்புக்களையும் விவசாயிகள் மேற்கொள்வதற்கு பொருளாதார, தொழில்நுட்ப அறிவுரைகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். சூழல் ரீதியான தாக்கங்களை குறைப்பதற்கு விவசாயிகளுக்கு அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனவே காலத்தின் தேவைகருதி நவீனதொழில்நுட்பங்களை நெற்பயிர்ச் செய்கையில் புகுத்துவதோடு அதனால் இப்பிரதேச நெற்பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட பாதகமான தாக்கங்களையும் கவனத்தில் கொண்டு நெற் செய்கையை விருத்தியடையச் செய்து அதன் மூலம் இப்பிரதேச நெல்உற்பத்தியின் அளவை அதிகரிக்கச் செய்யலாம்.