dc.description.abstract |
வாழ்வாதாரம் என்பது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு மூலமாகும். நிலைத்து நிற்கக்கூடிய வாழ்வாதாரமானது தனிப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அடிப்படையாக அமையும் இயற்கை, சமூக, பௌதிக, மானிட மற்றும் நிதி மூலதனம் ஆகிய ஐந்து சொத்துக்களில் தங்கியுள்ளது (kristanson, et al., 2005) நிலைத்து நிற்கக் கூடிய வாழ்வாதார உத்திகளும் சொத்துக்களும் வறுமையான மக்களின் வாழ்வாதாரத்தில் சுற்றுச் சூழல் வளங்களின் பங்கினை மிகவும் ஆழமாக ஆராய்வதற்கான ஒரு வழியை வழங்குகின்றது. (kristanson, et al., 2005). வாழ்வாதாரச் சொத்துக்களின் பரம்பலும் அவற்றின் அளவுகளும் மக்களின் வறுமையை தீர்மானிப்பவையாக விளங்குகின்றன. வறுமை என்பது இடம் சார்ந்த ரீதியில் சமனற்றுக் காணப்படும் ஒரு தோற்றப்பாடாகும். வறுமையினுடைய இடம்சார் பரிமாணத்தினை காட்சிப்படுத்தும் ஒரு பிரபல்யமான வழிமுறையாக வறுமை பற்றிய படமானது இப்பொழுது காணப்பட்டு வருகின்றது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள வாழ்வாதாரச் சொத்துக்களை அடையாளப்படுத்தி அவற்றின் இடம்சார் பாங்கினை படமாக்குவதன் மூலம், வாழ்வாதாரச் சொத்துக்களின் அடிப்படையில் வறுமையின் இடம் சார்ந்த பரம்பலை அறிவதே இவ் ஆய்வின் நோக்கமாகும். இவ் ஆய்வானது முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் Arc GIS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இங்குள்ள இருபத்தேழு கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள வாழ்வாதாரச் சொத்துக்கள் அடையாளப்படுத்தப்பட்டு, படமாக்கப்பட்டு அவற்றின் இடம்சார் பாங்குகளை அடிப்படையாகக் கொண்டு வறுமை மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில் வாழ்வாதாரச் சொத்துக்களின் பரம்பல் மட்டங்கள், ஒரே மாதிரியாக காணப்படவில்லை. வாழ்வாதாரச் சொத்துக்களின் பரம்பலில் காணப்பட்ட வேறுபாடுகளே வறுமை மட்டங்களிலும் வேறுபாடுகள் காணப்படக் காரணமாகும். எனவே கிராம சேவகர் பிரிவு ரீதியாக காணப்படுகின்ற வாழ்வாதாரச் சொத்துக்களின் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்து அவற்றின் பரம்பலை சமப்படுத்துவதன் மூலம் வறுமையினைக் குறைக்க முடியும். இவ்வாய்வினை மேற்கொண்டதன் மூலம் இப்பிரதேசத்தின் வாழ்வாதாரச் சொத்துக்களின் இடம் சார் பாங்கிற்கும் வறுமைக்கும் இடையிலான தொடர்பினை அறிய முடிந்துள்ளது. |
en_US |