Abstract:
யாழ்ப்பாண மாவட்டமானது சுற்றுலாவுக்கான அதிகளவான வாய்ப்புக்களை கொண்டுள்ளமையால் இங்குவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனினும் எண்ணிக்கைக்கேற்ப தங்குமிடங்கள் இல்லாத நிலையானது யாழ் நகரில் காணப்படுவதனால் தங்குமிடம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பிற்கும், அவர்களது வசதி நிலைக்குமேற்ப அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தங்குமிடங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இவ்வாய்வானது சுற்றுலாப்பயணிகள் தங்குமிடங்கள் போதியளவு இன்மையால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அறிவதனையும், தற்போதுள்ள தங்குமிடங்களில் காணப்படும் வசதிகள் பற்றி அறிவதுடன் தங்குமிடம் அமைய வேண்டிய பொருத்தமான இடத்தினை இனங்காண்பதையும் நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுடன் கலந்துரையாடி வினாக்கொத்துக்கள் வழங்குவதனூடாகவும் பொது இடங்களில் தங்குகின்ற சுற்றுலாப் பயணிகளின் செயற்பாடுகளை அவதானிப்பதன் மூலமாகவும் பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு சுற்றுலாப்பயணிகள் தங்குமிடம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அறியப்பட்டுள்ளது.
எனவே சுற்றுலாத் தங்குமிடம் தொடர்பாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளது. அதாவது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, மற்றும் வசதி நிலைக்கேற்ற தங்குமிடங்கள் இல்லாத நிலை காணப்படுவதுடன் தற்போதுள்ள தங்குமிடங்கள் பொருத்தமான இடங்களில் அமையாமையால் இட அமைவு சார் பிரச்சினைகளும், தங்குமிடங்களில் காணப்படும் வசதிகள் போதியளவு இன்மையால் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இவ்வாறான நிலையில் தங்குமிடங்களினை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்பவும் வசதிகளுக்கேற்பவும் பொருத்தமான இடங்களில் சரியான முறையில் திட்டமிட்டு அமைக்க வேண்டிய தேவையானது காணப்படுகின்றது. யாழ் நகரில் சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வானது தங்குமிடம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டலை வழங்குகின்றது. மற்றும் தங்குமிடங்களை அமைப்பவர்களுக்கு சரியான முறையில் திட்டமிட்டு, பொருத்தமான இடங்களில் தங்குமிடங்களை அமைப்பதற்கான வழிகாட்டலை வழங்கும்.