Abstract:
இன்று உலகில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகரித்துச் செல்வது முக்கிய ஒரு சமூகப் பிரச்சனையாக தோன்றி உள்ளது. இந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்படுகின்றது. பொதுவாக இக்கட்டுரையில் பெண்கள் குடும்பத்திற்கு தலைமை தாங்குவது என்பது பல காரணிகளின் நிமிர்த்தம் ஏற்படக்கூடியதாக இருப்பினும் இங்கு கணவனின் இறப்பின் விளைவாக உருவாகிய குடும்பங்கள், மனமொருமித்து குடும்பமாக வாழ முடியாது சட்ட ரீதியாக விவாகரத்துப் பெற்ற குடும்பங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது. இக்குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலை குறித்தும், இக்குடும்பப் பெண்கள் சமூக, பொருளாதார ரீதியில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், இக்குடும்பங்களை முன்னேற்றுவதற்கு எவ்வாறான திட்டங்களை முன்வைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதும், பிரச்சனைக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை முன்வைப்பதும் இவ் ஆய்வின் நோக்கங்களாக உள்ளன. ஆய்வுப் பிரதேசத்திலுள்ள ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் 616 கிராமங்களில் மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு 30,359 குடும்பங்களில் 3775 குடும்பங்கள் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக உள்ளன. இவர்களில் 375 குடும்பங்கள் எல்லாக் கிராமங்களையும் உள்ளடக்கும் வகையில் எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் நேரடி அவதானம், பேட்டி காணல், கலந்துரையாடல் போன்ற முறைகள் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இவ் ஆய்விற்காக இரண்டாம் நிலைத் தரவுகளும் சேகரிக்கப்பட்டு, பெறப்பட்ட தரவுகளானது கணினி மூலம் குறிப்பாக Excel Package மூலமும், புவியியல் அளவை சார் நுட்ப முறை மூலமும், (Quantitative technique in Geography) எளிய புள்ளி விபர முறை மூலமும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஆய்வில் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளின் படி பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சமூக பிரச்சனைகளாக சமூக அந்தஸ்து குறைவு, கல்வி அறிவு குறைவு, வீட்டு வசதிகள் சீராக இல்லாமை, மலசல கூட வசதிகள் இல்லாமை இதனால் சுகாதார சீர்கேடுகள், பாதுகாப்பின்மை என்பனவும் பொருளாதார பிரச்சனைகளாக வேலையின்மை, வருமானமின்மை, வறுமை இதனால் பிள்ளைகள் சிறந்த கல்வியைப் பெற முடியாத நிலை, போசாக்கான உணவின்மை போன்றன அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனை விட உளவியல் ரீதியான பிரச்சனைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.