Abstract:
உலகில் தோன்றிய இலக்கியங்களுக்கெல்லாம் முன்னோடி இலக்கியமாகவும், சிறப்பான இலக்கியமாகவும் போற்றப்படுவது திருக்குறள் ஆகும். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருந்தாலும் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் பயன்படும் ஒப்பற்ற நூல் ஆகும். திருவள்ளுவரால் இயற்றப்பட்ட 'உலகப்பொதுமறை' என அழைக்கப்படும் திருக்குறளிலே பல்வேறு விடயங்களினைக் காணமுடிகின்றது. திருக்குறளில் வள்ளுவர் எடுத்துக்காட்டாத விடயங்களே இல்லை என்று கூறலாம். இயற்கை வளங்களும், திருக்குறளும் என்னும் இவ்வாய்வானது திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் இயற்கை வளங்கள் தொடர்பான கருத்துக்களை வெளிக்கொணர்தல் மற்றும் திருக்குறள் பற்றிய அடிப்படையான அறிவினைப் பெற்றுக் கொள்ளுதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு விபரண ரீதியான ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வு தொடர்பாக பல இலக்கிய மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருவள்ளுவர் இயற்கை வளங்கள் என்பதனுள் நிலம், நீர், காற்று, ஆகாயம், மழை, காடு, மலை, தாவரங்கள், பூக்கள், கனியவளங்கள் போன்றவற்றை பல்வேறு குறட்பாக்கள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார். இந்த வகையில் இக்கட்டுரையானது பிற்பட்டகால ஆய்வாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் அமையும்.