Abstract:
இவ் ஆய்வானது போருக்குப் பிந்திய வடமாகாணச் சூழலில் சிறுவர் பராமரிப்பு இல்லங்களின் வகிபங்கினை எடுத்துக்காட்டுவதோடு அங்கு சிறுவர்கள் எதிர்கொள்ளும் உடல், உள, சமூக ரீதியான பிரச்சினைகளையும் அதற்கான காரணங்களையும் அப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகளையும் முன்மொழிவதாகவும் அமைகிறது. போருக்கு பிந்திய வடமாகணச் சூழலில் முன்னைய காலங்களைவிட இன்று சிறுவர் இல்லங்களின் தேவைப்பாடும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. போருக்குப் பிற்பட்ட சூழலில் அநாதைகள் ஆக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதோடு அச் சிறுவர்கள் உடல்,உள, சமூக ரீதியாக பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழல் காணப்படுகின்றது. இவ்வாறான சிறுவர்களுள் சிலர் சிறுவர் பராமரிப்பு இல்லங்களினுள் சேர்த்து கொள்ளப்படுவதோடு அங்கு தமது அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதோடு அங்கு அவர்கள் தமது எதிர்காலம் நோக்கிய இலட்சிய வாழ்விற்கு ஓர் திட்டமிடப்பட்ட ஒழுங்குமுறையில் வழிப்படுத்தப்படுகின்றனர். இவ் ஆய்விற்காக இலங்கையின், வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள7 சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு வாழும் 787 சிறுவர்களுள் 100 பேர் எழுமாற்று மாதிரித் தெரிவின் மூலம் ஆய்விற்காக உள்வாங்கப்படுகின்றனர். இங்கு ஆய்வு முறையியல்களாக பகுப்பாய்வு முறையியல்,விபரண முறையியல், வரலாற்று முறையியல் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இவ் ஆய்வில் முதன்நிலைத்தரவுகள், இரண்டாம் நிலைத்தரவுகள் மூலம் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. இங்கு அளவுசார், பண்புசார் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.அளவுசார் நுட்பத்தில், வினாக்கொத்து ரீதியாக தரவுகள் சேகரிக்கப்பட்டு புள்ளிவிபரவியல் ரீதியாக பகுப்பாய்வு செய்யப்படுகிறது. பண்புசார் நுட்பத்தில் விடய ஆய்வு, நேர்காணல், பிரதான தகவல் வழங்குனரூடாக தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆய்வுமுடிவாக, இங்கு வாழும் சிறுவர்களுக்கு அடிப்படைத் தேவைகள்,கற்றலுக்கான வசதி வாய்ப்புக்கள் போன்ற பௌதீக ரீதியான தேவைகளை இப் பராமரிப்பு இல்லங்கள் சிறப்பாக அமைத்துக் கொடுத்த போதிலும் உளவியல் ரீதியான திருப்தி நிலைகள் 55% இற்கு குறைவாக காணப்படுகின்றன. இவ் வகையில் சிறுவர் பராமரிப்புஇல்ல நிர்வாகக் கட்டமைப்புக்குள் உளவளத்துணைப்பகுதியை இணைத்துக் கொள்வதாகவும் இவ் ஆய்வின் பரிந்துரைகள் அமைகின்றன.