Abstract:
தமிழர் சிந்தனை மரபில் திருக்குறளும் சைவசித்தாந்தமும் காத்திரமான இடத்தினைப் பெற்றுள்ளன. முப்பொருள் உண்மையினைப் பேசுகின்ற சைவசித்தாந்தமானது தனது இறுதி இலக்கமாக ஆன்மாவானது அறியாமையாகிய பாசங்களில் இருந்து நீக்கி இறைவனை அடைதலாகிய விடுதலையை குறிப்பிடுகிறது. இருப்பினும் இல்வாழ்வினை துறந்த நிலையில் விடுதலையை வலியுத்தவில்லை. மனித சமூக உள நிலைப்பாடுகளுக்கு இயைந்த வகையில் மனித வாழ்வின் விழுமியங்களை மேம்படுத்தி உயர்ந்த உன்னத நிலையை அடையலாம் என்பதனை சைவ சித்தாந்தம் வெளிப்படுத்தி நிற்கிறது. இந் நிலைப்பாட்டினையே வள்ளுவரும் தனது குறள்களில் வெளிப்படுத்தியுள்ளமை சிறப்பிற்குரியதாகும். அறம், பொருள், இன்பம், வீடு என்கின்ற புருடார்ந்தங்களை சைவ சமயத்தவர்கள் ஏற்று நின்றபொழுதும் வள்ளுவர் வீடாகிய விடுதலை பற்றி தனித்து குறிப்பிடாது அறம், பொருள், இன்பமாகிய மூன்றினுடாக விடுதலை பற்றி கூறுகின்ற வகையில் திருக்குறளிலும் சைவ சித்தாந்தத்திலும் விடுதலை பற்றிய சிந்தனைகளை ஒப்பிட்டு ஆராய்வதாக இவ் ஆய்வு அமைகிறது.''திருக்குறளிலும் சைவசித்தாந்ததிலும் முன்வைக்கப்படுகின்ற விடுதலை பற்றிய சிந்தனைகள் ஒத்திசையும் தன்மையினைக் கொண்டுள்ளன''. என்ற கருதுகோளினை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு நகர்த்திச் செல்லப்படுகின்றது. இவ்வாய்விற்கு பண்பு சார் நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. இவ் ஆய்விற்காக முதன் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளும் பயன்படுத்தப் படுகின்றன. இங்கு ஆய்வு முறையியல்களாக பகுப்பாய்வு முறையியல், ஒப்பீட்டு முறையியல், விபரணமுறையியல் என்பன பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வு முடிவாக திருக்குறளும் சைவசித்தாந்தமும் இறுதி இலக்காக விடுதலையை முன்வைக்கின்ற போதிலும் அவை மனித வாழ்வினை வெறுக்காத பாங்கும் மனித வாழ்வினை சீர்மைப்படுத்துவதாகவும் அமைகிறது.