Abstract:
பிரதேசம் ஒன்றின் நிலம்சார் அபிவிருத்தி வேலைகளை மதிப்பீடு செய்வதற்கு நிலப்பயன்பாட்டு ஆய்வுகள் இன்றியமையாதனவாகின்றன. இவ்வாறான நிலப்பயன்பாட்டு ஆய்வுகள் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்டாலும் ஆய்வு மட்டங்களைப் பொறுத்து மதிப்பீடுகளின் தரம் வேறுபட்டு அமைகின்றன. நிலப்பயன்பாட்டு மாற்றம் என்பது ஆகக்குறைந்தது இரண்டு வெவ்வேறு காலப்பகுதியில் புவிமேற்பரப்பில் காணப்படும் பல்வேறு நிலப்பயன்பாடுகளின் வேறுபாடுகளை அடையாளம் செய்தலைக் குறிக்கின்றது. இலங்கையின் வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றங்களைத் தொடர்ந்து அபிவிருத்திப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றமையால் நிலப்பயன்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக குறுகிய காலத்தில் நிலப்பயன்பாட்டில் அதிகளவான மாற்றங்கள் நிகழ்வதால் அவற்றினைப் படமாக்குதலும், அவற்றினை மதிப்பிடலும் அவசியமாக உள்ளது. அந்தவகையில் கனகராயன் ஆற்று வடிநிலப்பகுதியின் நிலப்பயன்பாட்டு மாற்றங்களைப் படமாக்குதலும், அவற்றினை மதிப்பிடலுமே இவ்வாய்வின் நோக்கமாக உள்ளது. பங்குபற்றுதலுடனான கள ஆய்வு, செய்மதிப் படிமங்கள், இலங்கை நிலஅளவைத் திணைக்கள எண்ணிலக்க நிலப்பயன்பாட்டுப் படங்கள் (Digital Land Use Map) போன்றவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி புவியியல் தகவல் ஒழுங்கு (Geographical Information System - GIS) தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் கண்டறியப்பட்டு அவை மதிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலப்பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பிட முடிந்துள்ளது. ஆய்வுப்பிரதேச நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியனவாக இருந்தாலும் எதிர்காலத் திட்டமிடல்களை மேற்கொள்ளும் போது பொருத்தமான நிலங்களின் கிடைப்பனவு, அவற்றின் பயன்பாடு ஆகியவற்றினைக் கருத்தில் கொள்ளல் அவசியமானது. எனவே இவ்வாய்வானது நிலப்பயன்பாடுகளையும், அதில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும் படமாக்கிக் காட்டியுள்ளதோடு மாற்றங்களை அளவு சார் ரீதியாகவும், பண்பு சார் ரீதியாகவும் அறிந்துகொள்ள முடிந்ததுடன் எதிர்காலத்திலே கனகராயன் ஆற்று வடிநிலப்பிரதேசத்திலும் ஏனைய ஆற்றுநிலப் பிரதேசங்களிலும் மேற்கொள்ளுகின்ற ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.