Abstract:
பெண்கள் தமக்கென பல்வேறான அங்கீகாரத்தினை சமூகத்தில் கொண்டுள்ள நிலையில், உலகலாவியரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக்கொண்டு இருப்பதையும் காணமுடிகின்றது. இதில் யாழ்ப்பாணசமுதாயம் மட்டும் விதிவிலக்கல்ல.குறிப்பாக 2009இல் யுத்தம் நிறைவுற்ற பின்னர் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதை காணலாம். இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாண சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சிவீதம் அதிகரித்துள்ளதோடு, சமத்துவ சிந்தனைகள், சிறப்புரிமைகள் வழங்கப்பட்டபோதும் வன்முறைகள், மறைமுகமான அழுத்தங்கள் பெண்களை உடல், உளரீதியாக அதிகம் பாதிப்பவையாக உள்ளனஜ4ஸ. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் பற்றிய இவ்வாய்வில், பெண்கள் எத்தகைய வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்? அதற்குப் பின்னணியாகவுள்ள காரணங்கள் யாவை? இவ்வாறான நிலையிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் எவையாக இருக்கலாம்? என்பது குறித்து இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது. சிறப்பாக யாழ்ப்பாண பெண்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் வன்முறைகளை இனங்காண்பதும் அவற்றுக்கான தீர்வினைக் கண்டு கொள்ளுதலும் நடைமுறைப்படுத்துவதும் இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது பல்வேறு நிறுவனங்களில் இருந்தும், தனிப்பட்டவர்களிடமிருந்தும் பெறப்பட்ட தரவுகள், பத்திரிகைச் செய்திகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு விபரண ஆய்வுமுறை மூலம் ஆராயப்படுகின்றது. எடுத்துக்கொள்ளப்பட்ட பிரச்சினை சார்பாக எழுத்துருவில் உள்ள ஆக்கங்களிலிருந்தும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் மூலமும் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை ஓரளவுக்குத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வன்முறை நடைபெறும் வீதத்தை குறைப்பதோடு, எதிர்காலத்தில் யாழ்ப்பாண தமிழ்ச்சமூகம் பெண்களிற்கு உயர்பாதுகாப்பை வழங்கும் பிரதேசம் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.