Abstract:
பண்டைக்காலத்திலிருந்து மக்களை காக்கின்ற அல்லது வழிப்படுத்துகின்ற ஒர் நிறுவனமாக அரசுகள் இருந்துள்ளன. சில வலிமை பெற்ற அரசுகள் சிறு சிறு அரசுகளையும், பிறவற்றையும் தம்மரசுக்குள் உள்வாங்கிப் பேரரசுகளாக உருவாக்கம் பெற்றிருந்தன. அரசுகளின் உருவாக்கம், இவற்றின் கடமைகள், போர் நடவடிக்கைகள் என்பவற்றை அறியத்தரும் சான்றுகளில் கி.மு3ஆம் நூற்றாண்டுக்குரிய அர்த்தசாஸ்திரம். மற்றும் மனுஸ்மிருதி, சுக்கிரநீதி போன்றன பண்டைய கால அரசுகள் பற்றியும், ஆட்சி முறைகள் குறித்தும் அறியத்தருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை சங்க இலக்கியங்கள் அக்கால ஆட்சியாளர்கள், அவர்களது போர்த்திறம் பற்றி சில செய்திகளைத் தருகின்றன. ஆனால் அவை அக்கால அரசியல் தத்துவம், கோட்பாடுகள், பற்றி மிகக்குறைவான செய்திகளையே அறிய உதவுகின்றன. ஆயினும் சங்க மருகிய காலத்திற்குரியதாகக் கருதப்படும் திருக்குறளில் ஒரளவுக்கு அக்காலத் தமிழகத்து அரசியல் பற்றி அறிய முடிகின்றது. திருக்குறளில் நல்லாட்சியைப் பற்றியும் கொடுங்கோல் ஆட்சி பற்றியும் சில அதிகாரங்களில் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகக் கோன்மை என்ற சொல்லாட்சியின் பின்னணியில் திருக்குறளில் தரப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. வள்ளுவர் நோக்கில் கோன்மையானது செங்கோன்மை, கொடுங்கோன்மை என இரு வகைப்படுத்தப்படுகின்றது. செங்கோன்மையைப் பற்றி பொருட்பாலில் ஆங்காங்கே குறிப்பிட்டாலும் செங்கோன்மை என்ற அதிகாரத்தில் விரிவான கருத்துக்களை முன்வைத்துள்ளதைக் காணலாம். கொடுங்கோன்மை என்ற அதிகாரத்தின் ஊடாக எவ்வாறான ஆட்சியை ஆட்சியாளன் மேற்கொள்ளக்கூடாதென்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். கொடுங்கோன்மையின் தீவிரத்தைப் புலப்படுத்தும் வகையில் வெருவந்த செய்யாமை என்ற அதிகாரத்தையும் தந்துள்ளமையை அவதானிக்கமுடிகின்றது. இவற்றின் பின்னணியில் அக்காலக் கோன்மை பற்றிய கருத்துக்கள் இவ்வாய்வில் முன்வைக்கப்படுகின்றது.